திருச்சி: திருப்போரூர் கோயில் உண்டியலில் ஐபோன் விழுந்த நிலையில் அதை தர மறுப்பது நியாயமற்றது, கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலகலப்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோனை தர மறுப்பது நியாயம் கிடையாது. அதே கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் தொடர்கையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம். அவர் என்ன ஆரியப்படைத் தலைவரா? பணம் கொடுத்தால்தான் திமுகவினர் வேலை செய்வார்கள்.
ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி! அவர் எனது எதிரி அல்ல! திமுகதான் எனது எதிரி. பாஷா இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள சென்ற போது ஓட்டு பிச்சைக்காக நான் செல்வதாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் எனக்கு இதுவரை வாக்களித்தது இல்லை. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் 6ஆவது கடமையாக திமுகவுக்கு வாக்களிப்பதை வைத்துள்ளார்கள். இறைதூதரே வந்து சீமானுக்கு ஓட்டு போடுங்கள், திமுகவுக்கு போடாதீங்கன்னு சொன்னா கூட , இந்த மக்கள் "நீங்கள் இறைதூதரே இல்லை"னுதான் சொல்வாங்க!. ஏன்னா நான் பாஜகவோட பி டீமாம்! சரி அப்போ ஏ டீம் யாரு, திமுகதானே என சீமான் விமர்சித்துள்ளார்.