மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் படம் என நம்பிப் போனால் இரண்டாம் பாதியில் ஹீரோ பண்ண வேலையால் படம் சொதப்பி விட்டது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் விளாசி உள்ளார்.
முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார் என்கிற விமர்சனங்கள் சமீப காலமாக தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்துக்கும் இதே போன்ற விமர்சனங்கள் தான் குவிந்தன.
இயக்குநர்களுக்கு 50 சதவீதம், ஹீரோவுக்கு 50 சதவீதம் என பிரித்துக் கொள்வதால் தான் இந்த பாதிப்பு படத்திற்கு வருகிறது என்கிற குற்றச்சாட்டையும் தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் எடுத்துக் கூறியுள்ளார்.
முதல் பாதி சூப்பர்: ப்ளூ சட்டை மாறனுக்கும் மாவீரன் படத்தின் தயாரிப்பாளருக்கும் சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் ட்விட்டர் மோதல் ஏற்பட்டது. அதன் காரணமாக படத்தை மொத்தமும் கழுவி ஊற்றுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கம் போல நல்லா இருப்பதற்கு நல்லா இருக்கு என்றும், சொதப்பிய இடங்களை சுட்டிக் காட்டி சொதப்பல் என்றும் தனது விமர்சனத்தை கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
குடிசை மாற்று வாரியம் கட்டிய குடியிருப்புக்கு குடும்பத்துடன் செல்லும் சிவகார்த்திகேயன், அங்கே நடைபெற்ற ஊழல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்தும் ஆத்திரம் கொள்ளாமல் அட்ஜெஸ்ட் பண்ணிட்டுத் தான் வாழணும் என வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர் அவருக்கு ஒரு அசரீரி (விஜய்சேதுபதி குரல்) கேட்க அவருக்குள் எப்படி வீரம் வந்து மிஷ்கினையும் அவரது ஆட்களையும் புரட்டி எடுக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
யோகி பாபு சிரிக்க வச்சிட்டாரு: ரொம்ப நாள் கழித்து யோகி பாபு இந்த படத்தில் சிரிக்க வச்சிருக்காரு, வழக்கமா பல படங்களில் முடிஞ்சா சிரிங்க பார்க்கலாம் என்கிற பாலிசியை கொண்டு நடித்து வரும் யோகி பாபு மடோன் அஸ்வின் இயக்கம் என்பதால் அவரிடம் சரியாக வேலை வாங்கி காமெடி காட்சிகளை நல்லாவே வொர்க்கவுட் ஆகும் அளவுக்கு படம் என் டர்டெயின்மெண்ட்டாக உள்ளது என பாராட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
இரண்டாம் பாதி கவுந்துடுச்சு: விஜய்சேதுபதியின் அசரீரி குரல் எல்லாமே முதல் பாதியில் நல்லா படமாக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியில் மீண்டும் வழக்கம் போல ரிப்பீட் காட்சிகளை வைத்து படத்தை சொதப்பி விட்டனர்.
வில்லனாக மிஷ்கினை போட்டும் அவர் கோபப்படும் நேரத்தில் எல்லாம் தலைவரே எலக்ஷன் வருது என அவரை அடக்கி வாசிக்க வைத்து, மிரட்டல் வில்லனாக இருக்க வேண்டிய மிஷ்கினை காமெடி பீஸாகவே மாற்றி விட்டனர். அதிதி ஷங்கர் வழக்கம் போல தமிழ் சினிமா ஹீரோயின் போல அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே வந்து செல்கிறார். பத்திரிகையாளராக ரோல் கொடுக்கப்பட்டும், மக்கள் பிரச்சனையை தீர்க்க தன்னால் எதுவும் செய்ய் முடியாது என்று கூறுகிறார்.
ஆரம்பத்தில் சென்னை வட்டார வழக்கு சில இடங்களில் பேசும் கதாபாத்திரங்கள், அதன் பின்னர் அப்படியே தங்களுக்கு பிடித்த வட்டார வழக்கை பேசி நடித்துள்ளனர். அசரீரி மேட்டரை தவிர்த்து படத்தின் கதையில் எந்தவொரு புது விஷயமும் இல்லை, வெறும் உப்புமா படமாக கிண்டி வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் தங்கைக்கே ஒரு பிரச்சனை வந்து சம்பவம் ஆகிவிடுகிறது. அப்போது அந்த மக்கள் அமைதியாக இருப்பது எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை. சிவகார்த்திகேயன் தனக்கும், மக்களுக்கும் சேர்த்து தனியாக போராடுவதே ஹீரோ வொர்ஷிப் கதை தான்.
நல்லா வரவேண்டிய படத்தை நல்ல கதை இருந்தும் மடோன் அஸ்வின் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முடித்துள்ளார். மேலும், கடைசியாக மாவீரன் 2 என சக்சஸ் மீட்டில் உருட்டுவார்கள் பாருங்க, இன்னமும் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் நடந்த சண்டையில கிழிந்த சட்டையையே தைக்கவே இல்லை என்றும் படம் எங்கே சறுக்கியது என்கிற மைய பிரச்சனையை பற்றியும் பேசிவிட்டார்.