நம்மகிட்டேவே.. வங்கதேசத்தின் ரிமோட் இப்போ மோடி கையில்! இதை செய்தாலே முடிச்சி விட்ரலாம் போங்க

post-img
டெல்லி: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் தொடர்ந்து நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து தனிநாடாக உருவானதை குறிக்கும் ‛விஜய் திவாஸ்' நாளில் பிரதமர் மோடி போட்ட பதிவுக்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் பிரதமர் மோடியின் ஒரு நடவடிக்கை போதும். மொத்த வங்கதேசமும் முடங்கி போய்விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது அங்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. ஷேக் ஹசீனா இருந்தவரை வங்கதேசத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அதன்பிறகு முகமது யூனுஷ் வந்தவுடன் நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல், கோவில்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் தனியாக பிரிய போர் புரிந்தது. இதில் வெற்றி கிடைத்த பிறகு தான் வங்கதேசம் தனி நாடாக கடந்த 1971ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்தது. வங்கதேசம் தனிநாடாக உருவாக நம் நாட்டின் பங்கு அளப்பரியது. ஆனால் அதை கூட இப்போதைய இடைக்கால அரசு மறந்து முஷ்டி முறுக்கிகொண்டு நம்முடன் மோதலுக்கு வருகிறது. அதாவது வங்கதேசம் தனிநாடு கோரி பாகிஸ்தானுடன் போர் புரிந்தது. 1971ல் நடந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் சரணடைந்தனர். அதன்பிறகு தான் நாளடைவில் வங்கதேசம் என்ற பெயரில் தனிநாடாக உருவெடுத்தது. இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் ‛விஜய் திவாஸ்' கடைப்பிடிக்கப்படும். அந்த வகையில் கடந்த 16ம் தேதி ‛விஜய் திவாஸ்' கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், ‛‛இன்று, விஜய் திவாஸ் அன்று, 1971 இல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம் மற்றும் தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி, நமது தேசத்தைப் பாதுகாத்து நமக்குப் பெருமை சேர்த்தது. இந்த நாள் அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் அவர்களின் அசைக்க முடியாத ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர்களின் தியாகங்கள் தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும் மற்றும் நமது தேசத்தின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்திருக்கும்'' என்று கூறியிருந்தார். இதற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த நாட்டின் இடைக்கால சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ரூல், "நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன். 1971 டிசம்பர் 16 வங்கதேசத்தின் வெற்றி நாள். இந்த வெற்றியில் இந்தியா ஒரு கூட்டாளியாக இருந்தது. அதற்கு மேல் எதுவும் இல்லை" என்று கூறியிருந்தார். அதேபோல் இன்னும் சில வங்கதேசத்தின் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் ஜெய்ஸ்வால் கடும் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் தற்போது ஆசிப் நஸ்ரூலின் பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக செய்த உதவியை மறந்து நமக்கு எதிராக செயல்பட்டு வரும் வங்கதேசத்தை, இங்கிருந்தபடியே பிரதமர் மோடி நினைத்தால் உடனே முடக்கி கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விடமுடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இது முற்றிலும் உண்மை. இது எப்படி சாத்தியம். வாங்க பார்க்கலாம். அதாவது அண்டை நாடான வங்கதேசம் நம் நாட்டுடன் தான் 94 சதவீத எல்லைப்பகுதியை பகிர்ந்து கொள்கிறது. அதாவது இந்தியாவும் - வங்கதேசமும் மொத்தம் 4,096 கிலோமீட்டர் தூரத்தை பகிர்ந்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்துடன் 2,217 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் பகிர்ந்துள்ளது. இதனால் எல்லை பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துக்கு நம் நாட்டை சார்ந்து தான் இருக்க வேண்டும். கடந்த 2022-23ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே 16 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்தது. குறிப்பாக நம் நாட்டிடம் இருந்து தான் வங்கதேசம் பருத்தி, உணவு தானியங்கள், சர்க்கரை, எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்டீல் உள்ளிட்டவற்றை வாங்குகிறது. இந்த ஏற்றுமதியை நம் நாடு நிறுத்தினால் வங்கதேசத்தின் நிலைமை மோசமாகிவிடும். குறிப்பாக ஜவுளித்துறை மொத்தமாக முடங்கி விடும் . வங்கதேச நாட்டின் பொருளாதாரம் என்பது ஜவுளித்துறையை நம்பித்தான் உள்ளது. அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத பங்கை ஜவுளித்துறை தான் பூர்த்தி செய்கிறது. இப்படியான சூழலில் அந்த நாட்டின் ஜவுளித்துறையே நம்மை நம்பி தான் உள்ளது. ஜவுளித்துறைக்கான பருத்தியை நாம் தான் வங்கதேசத்துக்கு அனுப்புகிறோம். நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியில் 35 சதவீதம் வங்கதேசத்துக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதியை மோடி நிறுத்தினால் வங்கதேசத்தின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கும். தற்போதைய தகவலின்படி வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அந்த நாடு ரூ.2 லட்சம் கோடிக்கு இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சதவீதம் என்பது 6.3 என்ற அளவில் இருந்து 5 ஆக சரிந்துள்ளது. தற்போது இன்னும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு ஜவுளித்துறை நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. வங்கதேசத்தில் தொடர்ந்து நடக்கும் பிரச்சனை, சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, பதற்றமான சூழலால் இந்த இழப்பை வங்கதேசம் சந்தித்து வருகிறது. இப்படியான சூழலில் பிரதமர் மோடி நினைத்தால் இங்கிருந்தபடியே வங்கதேசத்தை முடக்க முடியும். இதனால் வங்கதேசம் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

Related Post