சென்னை: அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா (17), 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தற்போது தமிழக அரசு ஒருகோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. குகனுக்கு அளிக்கப்பட்டதை போல் அவருக்கு உரிய உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதம் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடந்தது அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றார்கள். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா (17) பங்கேற்றிருந்தார். மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாம்பியன் ஆனார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான இவருக்கு கடந்த ஜூலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் பண உதவி செய்தார். இதனிடையே கடந்த மாதம் காசிமாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் அப்போது வெளியிட்ட பதிவில், "அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது Carrom World Cup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!" என்று பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த போட்டியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷின் சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது. குகேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகஅவரை புகழ்ந்து பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள். குகேஷ் தனது 18 ஆவது வயதில் 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு சிங்கப்பூரில் நடந்த போட்டியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதால் பரிசு தொகையாக 11 கோடி தரப்பட உள்ளது.இதில் வருமான வரி போக மீதமுள்ள தொகை அவருக்கு கிடைக்கும். இதுஒருபுறம் எனில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ஐந்து கோடி பரிசுதொகை அறிவித்தார். அவருக்கு நேற்று சென்னையில் பிரம்மாண்டமான பாராட்டு விழாவும் நடந்தது.
இந்நிலையில், இந்நிலையில்தான் குகேஷுக்கு கிடைத்துள்ள கெளரவம் இதற்கு முன்னால் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமா 3 தங்கப் பதங்களை வென்று சாதித்திருந்தார். இந்தச் சாதனையை அவர் 17 வயதில் நிகழ்த்திக் காட்டி இருந்தார். அப்படிப் பார்த்தால் குகேஷை விட ஒரு வயது இளையவர் இவர். ஆனால், குகேஷுக்கு கிடைத்த வெளிச்சமோ அல்லது ஊக்கத் தொகையோ இதுவரை இவருக்கு வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வடசென்னையைச் சேர்ந்த மக்கள் வருத்தத்தை பதிவு செய்தார்கள்.முதல்வர் ஸ்டாலின் காசிமாவுக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்திருந்தார். அவருக்கு எந்தத் தொகையையும் வழங்க உத்தரவிடவில்லை. அதை சுட்டிக்காட்டித்தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகள் தான் காசிமா. அவரை குகேஷ் அளவுக்குக் கெளரவம் செய்வதன் மூலம் விளையாட்டுத்துறையிலும் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று குரல்கள் வலுத்தன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கேரம் வீராங்கனை காசிமாவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார். பொதுவாக 1 தங்கப்பதக்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் என மூன்று தங்கப்பதங்களுக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இருப்பினும் காசிமாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் அறக்கட்டளை சார்பில் கூடுதலாக 40 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு, மொத்தம் 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக காசிமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.