சென்னை: “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் கொள்கை இருந்தது. உதயநிதி படங்கள் சமூக நீதி பேசியது. எல்லோரும் சமம் என்ற உணர்வை உருவாக்கியது. விஜய்யின் படங்களில் கொள்கை என ஒன்றும் கிடையாது.” எனப் பேசியுள்ளார் அமைச்சர் பொன்முடி.
சென்னை திரு.வி.க நகரில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய பொன்முடி, “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் பற்றி பேசாமல் அரசியல் பேசுகின்றனர். அம்பேத்கரை பற்றி பேச எவ்வளவோ செய்திகள் உள்ளது. அம்பேத்கரை பற்றி ஏதாவது தெரிந்தால் தானே அவர்கள் பேசுவதற்கு.
வாரிசு அரசியல் என்று பேச என்ன தகுதி உள்ளது? மன்னராட்சி, வாரிசு குறித்து அவர்களுக்கு பேச தகுதி இருக்கிறதா? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் கொள்கை இருந்தது. உதயநிதி படங்கள் சமூக நீதி பேசியது. எல்லோரும் சமம் என்ற உணர்வை உருவாக்கியது. விஜய்யின் படங்களில் கொள்கை என ஒன்றும் கிடையாது.
அம்பேத்கர் பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எவ்வளவோ சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அம்பேத்கரின் புகழைப் பரப்பியவர் நமது முதல்வர் ஸ்டாலின். இளைஞர்களை வழி நடத்தக்கூடிய வகையில் இருந்து கொண்டிருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவர் ஒரு செங்கல்லை வைத்துக்கொண்டு பலரையும் ஆட்டி படைத்தார். படிக்கின்ற காலத்திலிருந்து கொள்கை பிடிப்போடு வளர்ந்தவர் அவர். அதனால் தான் சனாதனத்தை பற்றி பேசுகிறார். அவரை விமர்சிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் சுற்றாத இடம் கிடையாது என்ற அளவுக்கு ஒவ்வொரு ஊரிலும் சென்று ஆய்வு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அதற்கேற்ற உத்தரவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த அளவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர் தான் நமது உதயநிதி ஸ்டாலின்.
பேரிடர் காலங்களில் தமிழ்நாட்டு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நேரடியாக கலத்திற்குச் சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். மற்றவர்களைப் போல் வீட்டில் இருந்து கொண்டு கருத்து கூறவில்லை. எதிர்காலத்தில் தமிழ்நாட்டை வழிநடத்தும் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தவெக தலைவர் விஜய், “கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
நீங்கள் உங்களுடைய சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது” என்று பேசினார்.
இந்த நிகழ்வில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது” என்றார். இதற்கு திமுக தரப்பில் பலரும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் தான் அமைச்சர் பொன்முடி மேற்கண்டவாறு பேசியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage