'ஆளுநர் பதவி'க்கு ஆசைப்பட்டு ரூ.5 கோடியை பறிகொடுத்த தமிழக நரசிம்மரெட்டி- சிக்கும் பாஜக ' தலைகள்'?

post-img

மும்பை: தமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவரிடன் 'ஆளுநர் பதவி' வாங்கித் தருவாக கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிரஞ்சன் குல்கர்னி என்பவர் ரூ.5 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவர் கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது நிரஞ்சன் குல்கர்னி என்பவர் நரசிம்ம ரெட்டியை சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, பாஜக தலைவர்களுடன் தமக்கு மிக நெருக்கமான தொடர்பு உள்ளது; நாட்டின் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவியை என்னால் வாங்கித் தர முடியும்; எனக்கு ரூ.15 கோடி பணம் கொடுக்க வேண்டும் என நரசிம்ம ரெட்டியிடம் பேரம் பேசினாராம் நிரஞ்சன் குல்கர்னி. இந்த மோசடி வலையில் நரசிம்ம ரெட்டியும் சிக்கிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நரசிம்ம ரெட்டியை மீண்டும் சந்தித்த நிரஞ்சன் குல்கர்னி, வாக்குறுதி அளித்த ஆளுநர் பதவியை பெற்றுத்தரவிட்டால் ரூ.15 கோடிக்கு ஈடாக தமது100 ஏக்கர் நிலத்தை எழுதித் தருகிறேன்; இதோ ஆவணங்கள் என சில பத்திரங்களைக் காட்டியுள்ளார். இதனால் நரசிம்ம ரெட்டி அசந்து போயிருக்கிறார்.
இவற்றை எல்லாம் நம்பி மொத்தம் ரூ.5 கோடியை நிரஞ்சன் குல்கர்னிக்கு அள்ளிக் கொடுத்தார் நரசிம்ம ரெட்டி. ஆனால் ஆளுநர் பதவியும் வரவில்லை; நிரஞ்சன் குல்கர்னியையும் காணவில்லை. இதன்பின்னரே தாம் மோசடி செய்யபட்டுவிட்டதை உணர்ந்து நாசிக் போலீசில் நரசிம்ம ரெட்டி புகார் கொடுத்திருக்கிறார்.

தற்போது நிரஞ்சன் குல்கர்னி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிரஞ்சன் குல்கர்னியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? இதேபோல எத்தனை பேரிடம் நிரஞ்சன் குல்கர்னி ஏமாற்றி இருக்கிறார்? தமிழ்நாட்டு பாஜக பிரமுகர்களுக்கு தொடர்புள்ளதா? என்கிற கோணங்களில் நாசிக் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post