வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை வடதமிழ்நாடு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை நிலவரப்படி மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரைக்கு அருகே நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் சுழற்சி கடல் மட்டத்தில் இருந்து 3.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பரவியுள்ளதாகவும், இது மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து நாளை வடதமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், 25ஆம் தேதி புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி பயணத்தை தொடங்கியிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
“புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை காலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும்” என்றும், “இரண்டு நாட்களுக்கு அந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் “மழையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது” என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யலாம் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.