தமிழகத்தில் கால் பதிக்கும் காவிரி.. 100 அடியை எட்டும் மேட்டூர் அணை நீர் மட்டம் !

post-img

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் இன்று மாலை பிலிகுண்டுவை வந்தடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 66 அடியாக உள்ள நிலையில் காவிரியில் வெள்ளம் வந்து விரைவில் நிரம்ப வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 66 அடியாக சரிவடைந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 மைல் பரப்பளவை கொண்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதிக்கு குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்துவ ஆலயம் மக்கள் இடிக்காமல் அப்படியே விட்டு சென்றனர். அணையின் நீர்மட்டம் குறையும் போது, காவிரி கரையோர பகுதியில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்போது, நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் வெளியே தெரியும்.

கடந்த 12ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு இன்று 70 அடிக்கும் கீழே குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கி உள்ளது. இதனை காண வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 புள்ளி 35 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நீர் இருப்பை கருத்தில் கொண்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்புகிறது. கனமழையால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு விநாடிக்கு 14ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 4000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 48000 கன அடியாக உள்ளது.

கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,749 கன அடியாக உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை பிலிகுண்டுவிற்கு காவிரி நீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை அதிகரிக்கும் பட்சத்தில் கர்நாடகா அணைகளில் இருந்து அதிக நீர் உபரி நீராக திறக்கப்படும். இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஜூலை 12ஆம் தேதியே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. ஓராண்டுக்கும் மேலாக 100 அடிக்கும் மேலே மேட்டூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளதால் கர்நாடகா அணைகளில் இருந்து சில தினங்களுக்கு முன்புதான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீரின்றி வாடத் தொடங்கியுள்ளன. எனவே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Post