சென்னை: திமுக ஃபைல்ஸ்-3 எனும் பெயரில் திமுக ஆட்சிக்கு எதிரான ஊழல்கள் தொடர்பான மூன்றாவது பகுதியை 2025-ல் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் பாஜக அண்ணாமலை. இதில் புதிய வடிவில் பல்வேறு தகவல்கள் இடம் பெறும் என்றும் அவரே தெரிவித்துள்ளார்.
ஆளும் திமுகவிற்கு எதிராக ஏற்கனவே இரண்டு கட்டமாக திமுக ஃபைல்ஸ் ஆவணங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து திமுக ஃபைல்ஸ் விவரங்களை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். இதற்காக மிகப்பெரிய இரும்பு பெட்டியில் ஆவணங்களை போட்டு அண்ணாமலை ஆளுநர் ஆர். என் ரவியிடம் அளித்தார்.
இதற்கு சமீபத்தில் அண்ணாமலை மேல்படிப்பிற்காக வெளிநாடு சென்றார். மூன்று மாத மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் நாடு திரும்பினார். இவருக்கான சான்றிதழ் அடுத்த வருடம் பிப்ரவரியில் வழங்கப்படும். பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பெரிய அளவில் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடுவது போல தெரியவில்லை.
சில பேட்டிகளை அண்ணாமலை கொடுத்தார். விஜய் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். ஆளும் திமுக பற்றியும் கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் கட்சி சார்பாக மீட்டிங் எதுவும் நடத்துவது இல்லை. கட்சியின் தற்போதைய நிலை குறித்து மீட்டிங்கில் எதுவும் நடத்தவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக ஃபைல்ஸ்-3 எனும் பெயரில் திமுக ஆட்சிக்கு எதிரான ஊழல்கள் தொடர்பான மூன்றாவது பகுதியை 2025-ல் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் பாஜக அண்ணாமலை. இதில் புதிய வடிவில் பல்வேறு தகவல்கள் இடம் பெறும் என்றும் அவரே தெரிவித்துள்ளார்.
ஆளும் திமுக பற்றி அதிர வைக்கும் விவரங்கள் அடங்கிய கோப்புகளை அண்ணாமலை இதில் வெளியிட இருக்கிறாராம். தொடக்கத்தில் திமுகவுக்கு எதிரான மூன்றாவது பகுதியை 2025 ஜனவரி 1-ந்தேதி அதாவது புத்தாண்டு அல்லது பொங்கல் தினத்தில் வெளியிடுவது என அவர் திட்டமிட்டிருந்துள்ளார். அப்போதுதான் அவர் ஆக்டிவாக இருப்பது தெரியும்.. மீண்டும் பாஜக லைம் லைட்டிற்கு வரும் என்று கருதப்பட்டது. ஆனால், லண்டனில் சென்னை திரும்பியதும் டெல்லிக்கு பறந்த அண்ணாமலைக்கு டெல்லியில் கொடுக்கப்பட்ட உத்தரவின்படி, அவர் திட்டமிட்ட தேதியில் மாற்றம் இருக்கிறது என்கிறார்கள்.
அதாவது, டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷா மற்றும் உள்துறை அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில், லண்டன் பயணத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். தவிர, தமிழகத்தில் செய்ய வேண்டிய அரசியல் குறித்து அவர் விவரித்திருக்கிறார். அதில், கொங்கு மண்டல அரசியல் பற்றி நிறைய பேசியுள்ளார்.
அப்போது, திமுகவின் ஊழல்கள் தொடர்புடைய மூன்றாவது ஃபைல்ஸை வெளியிடலாம்னு இருக்கே என்றும் கூறியுள்ள அவர், அதில் என்னென்ன மாதிரியான தகவல்கள் இடம் பெறும் என்பதையும் குறிப்புகள் மாதிரி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதனை வெளியிட ஓ.கே. சொன்ன மேலிடம், புத்தாண்டு அல்லது பொங்கல் தினத்தில் வெளியிடலாம் என இருப்பதையும் அவர் சொல்ல, இப்போதே வெளியிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள். எப்போது வெளியிடலாம்னு நாங்கள் சொல்லும் போது ரிலீஸ் செய்தால் போதும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அதனால் தேதி மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.