ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறிப்பு.. திருத்தணி திமுக எம்.

post-img

திருவள்ளூர்: திருத்தணி திமுக எம்.எல்.ஏவின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் தனது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதாக திமுக பெண் நிர்வாகி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளராகவும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் சந்திரன். இவர் மீது திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆசைக்கு இணங்க மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.


அந்த வீடியோவில் பேசும் பெண், தான் திமுகவில் திருத்தணி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளராக 10 ஆண்டுகளாக பணியாற்றியதாகவும், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளராக 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளதாகவும், திமுக அறிவித்த பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பதவியில் இருந்து தன்னை மாற்றிவிட்டதாகவும், திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரன் சொன்ன ஒரு காரியத்தைச் செய்யாததற்காக தான் மாற்றப்பட்டுள்ளதாகவும், சந்திரன் தன்னிடம் தகாத முறையில் நடக்க ஆசைப்பட்டார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.


மேலும், மகளிர் அணியைச் சேர்ந்த பெண்களிடம் போன் நம்பர் கொடுத்து தன்னிடம் பேச வைக்குமாறு சந்திரன் வற்புறுத்தியதாகவும், அவர்களை தனது ஆசைக்கு இணங்க வைக்குமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால், இதுபோன்ற கேவலமான பிழைப்பு எனக்கு தேவையில்லை என்று தான் கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், திமுகவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் மகளிர் அணியினருக்கு இது போன்று அச்சுறுத்தல் ஏற்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள அந்த பெண் நிர்வாகி, இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து புகார் அளிக்க சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற போது அவரை பார்க்க முடியாததால் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் புகார் அளித்ததாகவும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் கூறியதற்காக, கட்சியை விட்டு துரத்திவிடுவேன், ஒழித்துவிடுவேன் என எம்.எல்.ஏ மிரட்டினார், ஆனால், தலைவரின் கவனத்திற்குச் செல்லும் வரை இந்த வீடியோவை பதிவிட்டுக்கொண்டே இருப்பேன். தலைவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

 

 

Related Post