“எப்போ?.. ஓ மை காட்”.. திருவண்ணாமலை மண்சரிவு குறித்த கேள்விக்கு.. நடிகர் ரஜினிகாந்த் ரியாக்ஷன்

post-img

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்த நிலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை மண் சரிவு சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
பெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடல்போல காட்சியளித்தது. அதேபோல, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளம் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் பொதுமக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். திருவண்ணாமலையில் இதுவரை காணாத அளவுக்கு கன மழை பெய்தது. இதனால், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மழையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து, மூன்று இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
திருவண்ணாமலை வ.உ.சி. நகர் பகுதியில் தீபம் ஏற்றும் மலைப் பகுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், வீடுகள் மண்ணில் புதைந்தன. ராஜ்குமார் என்பவர் வீட்டில் இருந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். ராஜ்குமார், அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
தொடர்ந்து பெய்து வந்த மழை மற்றும் மின்தடை, இடர்பாடுகளால் இயந்திரங்கள் செல்ல முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீட்புப் பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வந்த நிலையில், 3 நாள் மீட்புப் பணிக்கு பிறகு அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். அஞ்சலி செலுத்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார்.
அரசியல் கட்சியினர், நடிகர்கள் உள்ளிட்டோர் நிவாரண நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மண் சரிவு குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேட்டபோது, எப்போ... ஓ மை காட் என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து அடுத்தடுத்த படங்களின் சூட்டிங்குகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஜெயிலர் படம் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், ஜெயிலர் 2 படம் வேலைகளில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான அப்டேட் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கூலி படத்தின் சூட்டிங்குக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம், திருவண்ணாமலை மண் சரிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ரஜினிகாந்த், எப்போ நடந்துச்சு.. ஓ மை காட்.. சாரி.. வெரி சாரி.. என்று பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார்.

Related Post