ஸ்டார்பக்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறதா? டீ VS காபி! உண்மை என்ன?

post-img
சென்னை: சமீப காலமாக சமூக வலைத்தளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில், ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறக்கூடும் என்ற தகவல்கள் பரவி வந்தன. அதிக செலவுகள், சுவை குறைபாடு மற்றும் நஷ்டம் காரணமாக வெளியேற்றம் நடைபெறும் என்று அந்த தகவல்கள் பரவின. இது, ஸ்டார்பக்ஸ்சின் இந்திய எதிர்காலம் குறித்து விவாதங்களை கிளப்பியது. சில பதிவுகளில், இந்திய நுகர்வோர் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, ஸ்டார்பக்ஸ் உள்ளூர் "டம்ளர்" ஸ்டைல் காபியை வழங்க வேண்டும், ரொம்பவே ஹை-என்ட் பழக்க வழக்கம் நமக்கு ஒத்துவராது என்று கூட நகைச்சுவையாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஸ்டார்பக்ஸ்சின் இந்திய கூட்டு நிறுவனமான டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் இந்த வதந்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஸ்டார்பக்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வெளியான தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று அவர்கள் கூறியுள்ளனர். ஸ்டார்பக்ஸ் இந்திய நாட்டின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட கபே ஆபரேட்டராக மட்டுமல்லாமல், தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது என்றும், பொருளாதார மற்றும் ரியல் எஸ்டேட் சவால்கள் காரணமாக குறுகிய கால விரிவாக்கத்தை சரிசெய்தாலும், 2028 ஆம் ஆண்டுக்குள் 1,000 ஹோட்டல்களை திறக்க திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில் வருவாயில் மெதுவான வளர்ச்சி இருந்தபோதிலும், ஸ்டார்பக்ஸ் இந்தியா, முந்தைய ஆண்டில் 12% விற்பனை அதிகரிப்பைக் கண்டது, இதன் மூலம் $143.6 மில்லியன் வருவாய் ஈட்டியது. இந்தியாவின் காபி கலாச்சாரம் ஸ்டார்பக்ஸ்க்கு சில சவால்களை முன் வைப்பதை மறுக்க முடியாது. நமது நாடு இன்னும் அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்களால், அதிகமாக தேநீர் அருந்தும் நாடாகவே உள்ளது. காபி பெரும்பாலும் ஒரு ஆடம்பரம் அல்லது அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகிறது, குறிப்பாக ஸ்டார்பக்ஸ் செயல்பட்டு வரும் நகர்ப்புற மையங்களில். தேநீர் கலாச்சாரத்துடன் போட்டியிடும் கலாச்சார சவாலை எதிர்கொண்டுள்ளதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், பிரீமியம் காபி தேவை என்று செல்லும் உயர்தட்டு மக்களுக்கு ஸ்டார்பக்ஸ் அதன் சுவை மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. காபி விலை அதிகம் என்பதால், நாட்டில் ஏதாவது பண வீக்க பிரச்சினை வந்தாலும் இவர்கள் வியாபாரத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறதாம். சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் இளைய, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே வளர்ந்து வரும் காபி கலாச்சாரத்தை ஸ்டார்பக்ஸ் பூர்த்தி செய்வதில் உறுதியாகத்தான் உள்ளதாம். ஸ்டார்பக்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்திகள் பரவினாலும், டாடாவுடனான கூட்டு முயற்சியின் மூலம் அந்த நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டங்களில் வியூக மாற்றங்களுடன் சந்தையில் தொடர்ந்து இருக்க உறுதிபூண்டுள்ளது என்பதே உண்மை.

Related Post