கிருஷ்ணகிரிக்கு வந்த "விருந்தாளி"..

post-img

 சென்னை: தமிழ்நாடு அரசு வன உயிரினங்களை பாதுகாக்க எடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாகவே, இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது.. என்ன நடந்தது?

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓசூர் அருகே 686.406 சதுர கி.மீ பரப்பளவிலான காட்டுப்பகுதி, "காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்" என அழைக்கப்பட்டு வருகிறது.

அடையாளம்: கடந்த 2022ம் ஆண்டு, 'தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் அமைகிறது' என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருந்தார்..

இதற்கு காரணம், இந்த சரணாலயத்தில் 35 வகையான பாலூட்டிகளும் 238 வகையான பறவைகளும் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மண்ணையும் காத்து, மழையையும் பெற்று, வனம் வாழ வேண்டும் என்றால், பாலூட்டிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால்தான் இப்படியொடி அதிரடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார்.

இந்த காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் மென்மையான ஓடு கொண்ட ஆமைகள், சாம்பல் நிற அணில்கள், நீர் நாய்கள், சதுப்புநில முதலைகள், மான்கள், கழுகுகள், புலிகள் ஆகிய காட்டு உயிர்களுக்கு உகந்த வாழ்விடமாக விளங்குகிறது. அதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய காப்புக்காடுகளில் உள்ள ஒரு பகுதியை மட்டும் 'காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயமாக அரசு அறிவித்தது.

சுற்றுச்சூழல்: அரசின் இந்த அறிவிப்பு குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் அப்போதே தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு வனப் பாதுகாப்பில் இது ஒரு புதிய சகாப்தம்... 68,640 ஹெக்டேர் பரப்பளவில் புதிய சரணாலயத்தை அரசு அறிவித்துள்ளது. இது வனவிலங்குகளின் சொர்க்கமாக விளங்குகிறது என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் 2 ஆண் புலிகள் தென்பட்டன என்று சுப்பிரியா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது: சரணாலயம்: காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு 2 புலிகள் தென்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள 2 ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக் காப்பாளர் கார்த்திகாயினி தெரிவித்ததாக தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜுவாலகிரி காப்புக் காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024ல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த 2 புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது தெரிய வருகிறது.

புலிகளின் நடமாட்டம்: ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகமானது, சமீபத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தையும் ஒட்டியுள்ள, தொடர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற தமிழ்நாடு அரசு வன உயிரினங்களை பாதுகாக்க எடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் 2 ஆண் புலிகள் தென்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு: காவிரி ஆற்றுப்படுகையில், ஒரு தனித்துவமான சுற்றுசூழல் அமைப்பை கொண்டு, மேட்டூர் அணை வரை தாழ்வான காப்புக் காடுகளை உள்ளடக்கியிருக்கிறது.. வனஉயிரினங்களின் வாழ்விடம் மீட்டெடுக்கப்படும் என்பதாலும், காவிரி ஆற்றுப்படுகையின் மண்வளம், நீர்வளம் பாதுகாக்கப்படும் என்பதாலும்தான் இந்த பகுதியினை சரணாலயமாக அறிவித்திருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Related Post