சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யா. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக வேட்பாளராக சத்யா போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ2.78 கோடி என தெரிவித்திருந்தார்.
இதனிடையே சென்னையை பத்திரிகையாளர் அரவிந்தக்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் , அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யாவின் சொத்து மதிப்பு ரூ18 கோடி; ஆனால் சொத்து மதிப்பை மறைத்து பொய்யான தகவலை சத்யா வேட்புமனுவில் தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இப்புகாரில் முகாந்திரம் இருந்தால் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து விசாரணை நடத்திய தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சத்யா, 16.33 % சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர். இதனடிப்படையில் இன்று காலை சத்யாவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய மொத்தம் 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகள் நடத்தினர். சென்னையில் மட்டும் 19 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் மொத்தம் 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.