உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

post-img
டெல்லி: உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித நாளைக் கொண்டாடும் நாம், இயேசு கிறிஸ்துவின் அன்பு, நல்லிணக்கம் ஆகியவை தொடர்பான செய்தியை நம் வாழ்வில் பின்பற்றுவோம். சகோதரத்துவம், அனைவரின் நலம் ஆகியவை குறித்த அவரது போதனைகள் ஒரு சிறந்த உலகத்திற்கான பாதையை தொடர்ந்து ஒளிரச் செய்கின்றன. ஒற்றுமையையும், அமைதியையும் வளர்க்க இந்தப் பண்டிகை நமக்கு உத்வேகம் அளிக்கிறது. அமைதிக்கான இந்தக் காலத்தில், நம்பிக்கையும் மன்னிப்பின் சக்திகளும் உலகெங்கிலும் வலுவடைந்து மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்." துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்: நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் உணர்வானது நம்பிக்கை, இரக்கம், ஒற்றுமை ஆகியவற்றின் உலகளாவிய செய்தியை வழங்குகிறது. கிறிஸ்துவின் போதனைகள் தற்காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை. இவை அனைத்து மக்களிடையேயும் கருணை, புரிதல், பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படை முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த கொள்கைகள் சகோதரத்துவம், சமத்துவம், நீதி ஆகிய நமது அரசியலமைப்பு மதிப்புகளுடன் சரியாக ஒத்துப்போகின்றன. இந்த மகிழ்ச்சியான தருணத்தை நாம் கொண்டாடும் வேளையில், வாய்ப்புகள் கிடைக்காதவர்களை நாம் நினைவுகூர்ந்து அவர்களும், செழித்து வளரக்கூடிய ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். பண்டிகை காலம் நமது நாடு முழுவதும் உள்ள வீடுகளை அரவணைப்பு, அன்பு, நல்லிணக்கத்துடன் ஒளிரச் செய்யட்டும். கிறிஸ்துமஸ் கொண்டு வரும் அமைதி, நல்லெண்ணத்தின் செய்தி ஒரு வலுவான தேசத்தை நோக்கிய நமது பயணத்தில் நமக்கு வழிகாட்டட்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி: கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்: கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்" என்று பொறுமையையும், "ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்" என ஈகையையும், "பகைவர்களையும் நேசியுங்கள்" எனக் கூறி இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான். போர்களினாலும், வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும், சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து, அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: இயேசு பெருமான் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் இனிய வேளையில் கிறித்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஈராயிரம் ஆண்டுகளாக இயேசு பெருமானின் வார்த்தைகள் மானுடத்தை வழிநடத்துகின்றன. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் அவர் போதித்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுகின்றன. மனிதகுலம் வெறுப்பை எதிர்கொள்வதற்கு ஏதுவான மாமருந்து அன்பின் வழி பெருக்கும் சகோதரத்துவம் என்பதைப் போதிப்பதே இயேசுநெறியாகும்! வெறுப்புக்கு வெறுப்பை, வன்முறைக்கு வன்முறையோ தீர்வாகாது என்றும், அன்பும் கருணையும் தான் வெறுப்பைத் தணிப்பதற்கும் வன்முறையைத் தடுப்பதற்கும் வழிமுறை என்றும் உலகுக்கு எடுத்துரைக்கும் அறநெறியே இயேசுபெருமானின் போதனையாகும். அதன்வழியே மனிதகுலத்தினிடையே நல்லிணக்கத்தை வளர்த்து சகோதரத்துவத்தைத் தழைக்க செய்ய இயலும். அத்தகைய சகோதரத்துவமே மானுட அமைதிக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும். எனவே, இயேசுபெருமான் பிறந்தநாளில் இம்மண்ணில் சகோதரத்துவத்தைத் தழைக்கச் செய்ய உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Related Post