விடாது கருப்பு.. 1 இன்ச் நகராத ஐடி அதிகாரிகள்! 3வது நாளாக எ.வ வேலு இடங்களில் ED!

post-img

சென்னை: அமைச்சர் எ.வ வேலு இடங்களில் மூன்றாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.


எ.வ. வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் படுதோல்வியே ஐடி ரெய்டுக்கு காரணம் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.


ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது.இந்தியா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் கட்டமைக்க முயற்சி செய்வதால் கோபம் , என்று அவர் கூறியுள்ளார். சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, கரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 80 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கவனித்துவரும் பொதுப்பணித் துறையின்கீழ் பல்வேறு அரசு அலுவலக கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல கோடிகள் இந்த துறையின் கீழ் புழங்கும் நிலையில்தான் அங்கு வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
ரெய்டு மேல் ரெய்டு: திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள் என்று டாப் லீடர்கள் அடுத்தடுத்து அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தொடர் ரெய்டுகள் காரணமாக திமுக தரப்பிற்கும் பிரஷர் அதிகரித்துள்ளது.


சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.


தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இப்போதும் சிறையில்தான் இருக்கிறார். இதுவரை செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைக்கவில்லை.


பொன்முடி: சமீபத்தில் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.


தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.


இப்படிப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது.


இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


மணல் ரெய்டு: தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாகப பல புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, திண்டுக்கல் எனப் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனையில் இறங்கினர்.


ஆனால் இந்த ரெய்டுக்கு பின் உண்மையில் குறி வைக்கப்பட்டது யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இரண்டு அமைச்சர்களை கூறின் வைத்து ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்தது. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய மணல் குவாரி அதிபராக உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கினர்.


விரைவில் இந்த ரெய்டு தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் நிதி பின்புலத்தை முடக்குவதே இந்த ரெய்டின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
மின்சார துறை ரெய்டு; இதை தொடர்ந்து மின்சார துறை தொடர்பாக தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்தனர். கடந்த வாரம் இந்த சோதனை நடந்தது செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்தனர். சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்தனர். 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை செய்தனர்


செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசி தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார். தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.


வளைத்து வளைத்து சோதிக்கும் வருமான வரித்துறை.. எ.வ வேலு வீடு, நிறுவனங்களில் தணியாத பதற்றம்
ஜெகத்ரட்சகன் ரெய்டு: இதை தொடர்ந்து திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்தது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.


2019 லோக்சபா தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக 110 கோடி ரூபாய் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கணக்கு காட்டினார். அதோடு தனக்கு மனைவிற்கு 43 கோடி ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக புகார் வைக்கப்படுகிறது. வருமான வரித்துறை சந்தேகம் அடைந்து உள்ளது.


முக்கியமாக அவரின் மருத்துவ கல்லூரிகள் மூலமாக அதிக அளவு வருமானம் கணக்கின்றி வந்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றுள்ளதாம். அவருக்கு சொந்தமாக 15+ கல்லூரிகள் உள்ளன. இதில் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன.

 

Related Post