தமிழ்நாட்டில் இந்துத்துவா, சனாதன தர்மம் போன்ற சர்ச்சை கருத்துக்களை அங்கங்கே பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்தல் போன்ற அரசுடனான நிர்வாக மோதல் போக்குகளைத் தாண்டி அடுத்தகட்டமாக மாணவர்களிடையேயும் அவ்வப்போது பேசிவருகிறார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதலளித்த பிறகு, அரசுக்கும் ஆளுநருக்கும் பெரிதாக மோதல் எதுவும் அரங்கேறாத நிலையில், ஆளுநர் மாளிகை வரவு செலவு விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நிதியமைச்சர் குற்றம் சாட்டிய நிலையில், மீண்டும் மோதல்போக்கு முளைவிட ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா'வுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தமிழ்நாடு அரசின் கல்வித்தரதை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்த நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் ரவி பதிலளித்தார். அவற்றில் சில கேள்வி பதில்கள்...
``திமுக அரசின் ஒட்டுமொத்த ஆட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?”
``அரசின் செயல்பாடு குறித்து நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. மக்கள் தான் அதைக் கூறவேண்டும். இருப்பினும் அரசின் மீது எனக்கிருக்கும் கவலை என்னவென்று கேட்டால், அது மனித வள தரத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு என்று கூறுவேன். நாட்டிலேயே அதிகளவில் பொறியாளர்களை உருவாக்குபவர்களாக தமிழ்நாடு இருக்கலாம். இருப்பினும், இந்த ஆண்டு பொறியாளர்களில் 90 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஒரு காலத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கியது. ஆனால், இன்று சரிவை நோக்கி நகர்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது முக்கியமல்ல. நாடு முன்னேற வேண்டும். மக்கள் திறமையானவர்களாக இருந்தால் தான் அதை அடைய முடியும். அதற்கு தரமான கல்வியில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.”