சென்னை: கோவாவில் நடந்த திருமண விழாவுக்கு தனி விமானத்தில் சென்ற விஜய்யின் புகைப்படம் எப்படி வெளிவந்தது என்றும், இந்த புகைப்படங்கள் எல்லாம் எப்படி வெளியில் வந்தது? யாரு அந்த போட்டோவை எடுத்து வெளியில் விட்டார்கள்?.. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்க கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் கடந்த வாரம் கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்றிருந்தார். அப்போது அதே விமானத்தில் நடிகை திரிஷாவும் கோவா சென்றதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகின.
நடிகர் விஜய் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் பார்க்க வரவில்லை என்றும் ஆனால் திருமணத்துக்கு செல்வதற்கு மட்டும் நேரம் இருக்கிறதா என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவின. இந்த நிலையில் தனி விமானத்தில் கோவா சென்ற விஜய்யின் புகைப்படம் எப்படி வெளிவந்தது? என்றும் இதுதான் திமுகவின் ஆட்சி அமைக்கும் விதம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் போன வாரம் கோவாவிற்கு ஒரு திருமணத்திற்கு செல்கிறார். விமான நிலையத்தில் கேட் நம்பர் 6-இல் சோதனைக்கூடத்தில் தன்னை உட்படுத்திக்கொண்டு ஒரு தனியார் விமானத்தில் போகிறார். அவரது தனிப்பட்ட பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது. அந்த புகைப்பட எப்படி வெளியில் வந்தது. விஜய் அவர்களோடு யாரு வேண்டுமானாலும் போகலாம்.
அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதேபோல் விஜய்யும் யாருடன் வேண்டும் என்றாலும் போகலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இந்த புகைப்படங்கள் எல்லாம் எப்படி வெளியில் வந்தது. யாரு அந்த போட்டோவை எடுத்து வெளியில் விட்டார்கள். அதனால் தான் விமான போக்குவரத்து அமைச்சருக்கு நாங்க கடிதம் எழுத இருக்கிறோம். யார் யார் போகிறார்கள் என்று போட்டோ எடுத்து அனுப்புவது தான் கேட் இண்டலிஜன்ஸ் வேலையா?..
இந்த போட்டோவை எடுத்து திமுக ஐடி விங்கிற்கு கொடுப்பது தான் உங்க வேலையா?.. ஒரு தனிப்பட்ட மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவர் பாஜகவுக்கு எதிராக பேசினாலும், நான் இந்த கட்சியின் மாநிலத்தலைவராக சொல்கிறேன். இது தான் நீங்கள் காட்டக்கூடிய அரசியல் நாகரீகமா.. இது தான் திமுக மக்களை மதிக்கக்கூடிய விதம்..
யாரு வேண்டும் என்றாலும் எங்கேயும் போறாங்க.. தனியா போறாங்க.. திருமணத்துக்கு போறாங்க.. அவங்க ஒரு பயணி தான். இதனால் தான் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுகிறோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுங்கள்.. யார் அந்த வீடியோவை எடுத்தது என்று. அவர்களை கண்டுபிடித்து அவர்களது செல்போனை ஆய்வு செய்யுங்கள். யாருக்கு அந்த போட்டோவை அனுப்பினார்கள் என்பதை கண்டறிந்து எப் ஐ ஆர் போட்டு உள்ளே தள்ளுங்கள்.. என்று சொல்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.