விசிகவை கைப்பற்ற “பெரிய பிளான்” போட்ட ஆதவ் அர்ஜுனா? முறியடித்த திருமா.. விளக்கும் பத்திரிகையாளர்!

post-img
சென்னை: விசிகவை கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். திமுக கூட்டணியை குலைப்பதற்காக அனுப்பப்பட்டவர் தான் ஆதவ் அர்ஜுனா என்றும் கூறுகின்றனர். இதுபற்றி நமது ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ். "திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் சக்திகள் தான் ஆதவ் அர்ஜுனாவை அனுப்பி வைத்து இருக்கிறார்கள். தேசிய அளவில் பாஜகவுக்கும், மாநில அளவில் அதிமுகவுக்கும் தான் திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்ற குறி. அவர்கள் தான் அவரை விசிகவுக்கு அனுப்பி இருக்கிறார்கள். கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பதில் மார்ட்டின் தான் டாப்பில் இருக்கிறார். அதன் மூலம் ஆதவ் அர்ஜுனாவை பயன்படுத்தி உள்ளனர். அம்பேத்கருக்கு முரணான பேச்சு: இன்றைக்கும் மசூதிக்கு கீழே தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மதவாதம் வீழ்த்தப்பட்டு விட்டது எனப் பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற நல்ல சாமியார்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்கிறார். தீண்டாமை ஷேமமானது எனச் சொல்லும் சங்கராச்சாரியார் நல்ல சாமியாராம். அம்பேத்கர் புத்தகம் தயாரிப்பவர், அம்பேத்கருக்கு முரணான கருத்தைப் பேசுபவரை எப்படி ஆதரிக்க முடியும்? தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா விசிகவில் இயங்கி இருந்தால், விசிக தன் கையில் தான் இருக்கிறது என்ற எண்ணத்துக்கு ஆதவ் அர்ஜுனா வந்திருப்பார். ஆனால் கட்சிக்காரர்கள் அப்படியான இடத்துக்கு வந்திருக்க மாட்டார்கள். மதுரையில் திருமாவளவன் "தலித் பேந்தர் இயக்கத்தில்" பணியாற்றியதில் இருந்து, அவர்கள் தேர்தல் மறுப்பு இயக்கத்தில் இருந்தபோது, அந்த அமைப்பை முடக்குவதற்கு அத்தனை முயற்சிகள் நடந்தன. விசிகவை ஆதவ் அர்ஜுனா கைப்பற்றுவது சாத்தியமே இல்லை: தேர்தல் ஜனநாயக அரசியலில், மதச்சார்பற்ற சக்திகளுக்கு துணை புரிந்து தீரமாகச் செயல்பட்டார். ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது, 1 லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்திக் காட்டியவர் திருமாவளவன். திமுக, காங்கிரஸ் என சகல கட்சிகளையும் கடுமையாக எதிர்த்தவர் தான் திருமாவளவன். விசிக முழுக்க முழுக்க போராட்டங்களால் விளைந்த கட்சி. அதனை ஆதவ் அர்ஜுனா போன்ற ஒருவரால் கைப்பற்றுவது என்பது என்றைக்கும் சாத்தியமே கிடையாது. தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம்: திருமாவளவனின் ஆளுமை தான் அக்கட்சியை வழிநடத்துகிறது. விசிகவில் ஆளுமை மிக்க, அறிவுமிக்க பல இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிகவை கைப்பற்றும் திட்டம் இருந்திருந்தாலும் அது நடக்காத காரியம். தன்னால் வேலை ஆகவில்லை என்பதால் இப்போது அவர் கிளம்பிவிட்டார். இந்திய அளவில் பாஜக ஊடுருவாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. கேரளாவில் கூட ஒரு சீட் ஜெயித்துவிட்டார்கள். தமிழ்நாட்டிற்குள் அது சாத்தியப்படாமல் இருப்பதற்கு திமுக முக்கியமான தடையாக இருக்கிறது. அதனை உடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். அதற்கான கருவிதான் ஆதவ் அர்ஜுனா" எனக் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் தொடர்ச்சியான பேச்சுகள், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திருமாவளவன் ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்திருந்தார். அதன்பிறகும், திருமாவளவனின் கருத்துகளுக்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்ததால், "ஏதோ செயல் திட்டத்தோடு ஆதவ் அர்ஜுனா இருக்கக்கூடும்" என திருமா சந்தேகம் தெரிவித்தார். அதன் பிறகு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.

Related Post