மதுரையில் கிளம்பிய சர்வேயர்கள்.. நில அளவை அலுவலர் தற்செயல் விடுப்பு.. ஒரே நாளில் காலியான அலுவலகங்கள்

post-img
மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து, மாநிலம் தழுவிய போராட்டத்தை நில அளவை அலுவலர்கள் முன்னெடுத்தனர்.. நிலஅளவை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதை தவிா்க்க வேண்டும் என்றும் நில அளவை அலுவலகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள். நியாயமான தள்ளுபடிகளுக்குகூட ஆய்வு என்ற பெயரில் ஊழியா்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் , என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். களப்பணியாளர்கள்: அந்தவகையில், நில அளவைப் பதிவேடுகள் துறையில் தனியார்மயம், களப் பணியாளர்களின் பணிகளை முறைப்படுத்தி பணிச் சுமையை குறைத்திடுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நேற்றைய தினம் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தகுதியுள்ள நில அளவையர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப்பணியாளர்களை பதவி உயர்வு வழங்க வேண்டும், புல உதவியாளர்கள் பணியிடங்களை தனியார் முகமையின் மூலம் அத்துக் கூலிக்கு நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மதுரை போராட்டம்: அந்தவகையில், மதுரையிலும் நிலஅளவை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் மாநில செயலாளர் திவ்யா வரவேற்றார். முத்துமுனியாண்டி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் சில முக்கிய வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.. குறிப்பாக, நிலஅளவையருக்கு நிர்வாக பயிற்சி, நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும், களப்பணியாளர் பணிகளை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடு வழங்கவும் வேண்டும், நிலஅளவைத் துறையில் பொது மாறுதல் நடைமுறையை மாற்றி அமைக்க எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மீண்டும் வார்னிங்: மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தால் நிலஅளவைத் துறை அலுவலகங்கள் காலியாக கிடந்தன. பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டன.. அதுமட்டுமல்லாமல், நில அளவை அலுவலர்களின் கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றாவிட்டால், வருகிற ஜனவரி மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீண்டும் எச்சரித்துள்ளனர் நில அளவை அலுவலர்கள். திருத்தணியிலும், ஒரு நாள் அடையாளத் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் சர்வேயர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்தனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகங்களில் சர்வேயர் பிரிவுகள் வெறிச்சோடி நில அளவை பணிகள் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் 3ம் கட்டமாக வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தொடர் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post