சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மணப்பெண்ணிற்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்ட சுமார் 12 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கடந்த டிசம்பர் 5ம் தேதி திருமணத்தன்று மாயமானது. இந்த நகைகளை திருடியது யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளால் திருடியவர் வசமாக சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை, அடையார் இந்திராநகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த முரளி என்பவர் அங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆனந்தமுரளி தனது மகளுக்கு நீலாங்கரையில் உள்ள பீச் ரிசார்டில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். கடந்த டிசம்பர் 5ம் தேதி திருமணத்திற்கு தடல்புடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனந்த முரளி தனது மகளின் திருமணத்தையொட்டி கடந்த 5ம் தேதி அன்றே நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டை புக்கிங் செய்திருந்தார். அங்குதான் அவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கி இருந்துள்ளனர்.
நீலாங்கரை ரிசார்டில் திருமணத்திற்கு மணப்பெண்ணிற்கு அணிவிப்பதற்காக சுமார் 12 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை வைத்திருந்தனர். இந்த நிலையில், திடீரென மணப்பெண் அறையில் வைத்திருந்த நகைகள் மாயமாகி இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மணப்பெண் அறைக்குள் சென்ற சிலர் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ஆனந்த முரளி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை பறிமுதல் செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர் இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில் திருச்சி மாவட்டம், கல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் (31) என்பவர் தான் திருடியது என்பது தெரியவந்தது. இதையடுத்துதனிப்படை போலீசார் சென்னையில் வைத்து சுதர்சனை கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 12 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சுதர்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே ஐந்து குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் எம்பிஏ பட்டதாரி என்பதும் நீலாங்கரை பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சுதர்சன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரிசார்ட்டில் திருமணம் நடைபெற இருப்பதால், நகைகளை கொள்ளை அடிக்கலாம் என திட்டம் தீட்டி நகைகளை திருடியிருக்கிறார். சுதர்சனை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.