கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி மாநாட்டு மேடையில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் கரம் பிடித்துள்ளார். கடல் கடந்த காதலால் கஜகஸ்தானையும், கடலூரையும் இணைத்த காதல் தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த உலகத்தில் எத்தனை யுகங்கள் ஆனாலும் மாறாத ஒன்று என்று இருந்தால் அது காதல் தான்.. அமர காதல் தொடங்கி அலைபாயுதே காதல் வரை பல்வேறு காதல்களை தமிழ் சினிமாவும் செதுக்கி எடுத்து விட்டது.
பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல், படிக்கும் போது காதல், திருமணத்திற்கு பிறகு காதல் , திருமணம் கடந்த காதல், கடல் கடந்த காதல் என பல காதல் கதைகள் உள்ளன. குறிப்பாக நாடு, மதம், மொழி கடந்த காதல் கதைகள் தற்போது அதிகமாகி வருகின்றன.
இந்தியாவின் பாரம்பரியம், தமிழகத்தின் கலாச்சாரத்தின் மீது காதல் கொண்டு தமிழக இளைஞர்களை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாதத்திற்கு ஒரு செய்தியாவது வெளிநாட்டு பெண்ணுடன் தமிழக இளைஞர் திருமணம் என்று வந்து விடுகிறது. அந்த வகையில், அதே நேரத்தில் சற்று வித்தியாசமாக கம்யூனிஸ்ட் மேடையில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்துள்ளார் கடலூரைச் சேர்ந்த இளைஞர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது கடலூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் உறுப்பினர் கடலூர் மாவட்டம் சின்னகொசப்பலம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரபாகரன் என்பவர், கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷயக்மேதோவ் மகள் அய்டானாவை திருமணம் செய்து கொண்டார்.
விமான பொறியாளரான பிரபாகரன், கஜகஸ்தான் நாட்டில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அவருடன் பணியாற்றிய கஜகஸ்தானை சேர்ந்த அய்டனாவுக்கு பிரபாகரன் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது திருமணம் நடைபெற வேண்டும் என அய்டனா விரும்பியுள்ளார்.
அதே நேரத்தில் தானும் தனது தந்தையும் தீவிர கம்யூனிஸ்ட் என்பதால் கம்யூனிஸ்ட் மேடையிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்பது பிரபாகரனின் விருப்பம். இந்த நிலையில் ஓராண்டாக இருவரும் காதலித்து வந்த இருவரும் தங்கள் காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்த அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்புகள் இன்று திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடலூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலேயே இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அய்டனாவின் பெற்றோர் உறவினர்களும் கஜகஸ்தான் நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டனர். மேலும் கடல் கடந்து கஜகஸ்தானை சேர்ந்த இளம் பெண் அய்டனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட கடலூர் பிரபாகரனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.