‛லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம்! விஜய்க்கு புது சிக்கல்..

post-img

பெங்களூர்: காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ கர்நாடகாவில் லியோ படத்தை திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு -கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. இருப்பினும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்து வருகிறது.
இந்நிலையில் தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய அமைப்பினர் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மண்டியா, பெங்களூர், கர்நாடகா என என அடுத்தடுத்து பந்த் போராட்டம் நடத்தினர்.


குறிப்பாக கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கர்நாடகா முழுவதும் கடந்த மாதம் பந்த் நடத்தினார். அதன்பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் மண்டியா மாவட்டம் கேஆர்ஆர் அணை (கிருஷ்ணராஜசாகர்) அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


மேலும் தமிழக-கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார். அதன்படி இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் காவிரியில் தண்ணீர் கேட்கும் தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றார். இதையடுத்து கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்நிலையில் தான் அவர் நடிகர் விஜய் நடித்து நாளை திரைக்கு வர உள்ள ‛லியோ' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
‛‛நாளை ஏதோ ஒரு தமிழ் திரைப்படம் திரைக்கு வருகிறது. ஆம் லியோ. 900 ஷோ பெங்களூரில் லியோ ஓடுகிறது. இது என்ன தமிழ்நாடா?. ஸ்டாலினுக்கே நேரடியாக சொல்லிக்கொள்கிறனே். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு சார்ந்த அனைத்து படங்களையும் ஓடவிடமாட்டேன்.


ஒரு படத்தை கூட ஓடவிடமாட்டேன். எங்களை பற்றி யாரோ சிலரை வைத்து கெட்டதாக பேச வைக்கிறீர்களா?. நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் இப்படி தனிப்பட்ட வகையில் பேசுவது குற்றம். காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ கர்நாடகாவில் லியோ படத்தை திரையிட விட மாட்டோம். கர்நாடகாவில் லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும்'' என வாட்டாள் நாகராஜ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. படத்தை ப்ரோமேஷன் செய்யும் வகையிலான ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டிரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையும் விவாதத்தை கிளப்பியது.


இதுமட்டுமின்றி எசென்னையின் முக்கிய திரையரங்குகள் இன்னும் புக்கிங் திறக்கப்படாமல் உள்ளது. படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் படத்தின் ஒருவார வசூலில் வரும் லாபத்தில் 75சதவீதம் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளாததால் நாளை திட்டமிட்டப்படி படம் முக்கிய திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


மேலும் ஆந்திராவில் லியோ பெயர் சர்ச்சை தொடர்பாக நீதிமன்றம் 20ம் தேதி வரை திரையிட தடை விதித்தது. தற்போதும் அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் கர்நாடகாவில் இருந்து தமிழக அரசு தண்ணீர் கேட்டால் லியோ திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.

 

Related Post