பெங்களூர்: மைசூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மேடையில் தண்ணீர் பாட்டிலை திறக்க முடியாமல் திணறினார். இதனை பார்த்த ராகுல் காந்தி அடுத்த நொடி செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது. மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இதையடுத்து தேர்தல் வேளையில் காங்கிரஸ் கட்சி கூறிய 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றும் பணியில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், அன்னபாக்யா திட்டத்தி்ல் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இதையடுத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் க்ருஹ லட்சுமி திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தின் தொடக்கவிழா இன்று மைசூரில் நடந்தது. திட்டத்தை காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்பி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின் கீழ் மாதம் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.2000 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக கர்நாடகா அரசு ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த விழாவில் ராகுல் காந்தி கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி தேர்தல் வேளையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நாங்கள் ஒருபோதும் பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம். கர்நாடகத்தில் நாங்கள் செய்த பணிகள் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.
ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் எண்ணம். ஆனால் பாஜக அப்படியில்லை. பெரும் பணக்காரர்களுக்காக பாஜக செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தேர்தலுக்கு முன் அளித்த 5 வாக்குறுதிகளில் மூன்று வாக்குறுதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. இது நான்காவது வாக்குறுதியாகும். மீதமுள்ள வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்படும்'' என்றார்.
முன்னதாக விழாவில் மல்லிகார்ஜூன கார்கேவும், ராகுல் காந்தியும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே தனது அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறக்க முயன்றார். ஆனால் மூடி டைட்டாக இருந்ததால் அவரால் திறக்க முடியவில்லை. இதனால் அவரது முகம் மாறியது. இதை எதார்த்தமாக அருகே இருந்த ராகுல் காந்தி பார்த்தார்.
உடனடியாக அவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி திறந்தார். மேலும் தனது முன்பு இருந்த கண்ணாடி கிளாசை எடுத்த ராகுல் காந்தி அதில் ஊற்றி மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கினார். இதையடுத்து ராகுல் காந்தி கிளாசில் வழங்கிய தண்ணீரை குடித்து 81 வயது நிரம்பிய மல்லிகார்ஜூன கார்கே தாகம் தணித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ராகுல் காந்தியின் இந்த செயலை காங்கிரஸ் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.