சென்னை: நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து தற்போது 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்துள்ளார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார்.
அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் இன்றே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு எடுக்கபட்டது. அப்போது ஆர்த்தி தனக்கு உடல் நிலை சரியில்லாததால் பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
இதையடுத்து, ஜெயம்ரவியிடம் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி, விசாரணை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் பெயரில் இருவரும் 1 மணி நேரமாக மத்தியஸ்தர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மனம் விட்டு பேசும் இருவரும் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆர்த்தியும் அவரது அம்மா சுஜாதாவும் சேர்ந்து ஜெயம் ரவியின் வங்கி கணக்கை கையகப்படுத்தியதாகவும் அவருக்கு தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்ததாகவும் தான் கட்டிய வீட்டிற்குள்ளேயே தன்னை ஆர்த்தி சேர்க்கவில்லை என்றும் ஜெயம் ரவி தரப்பிலிருந்து சொல்லப்பட்டன. அது போல் ஆர்த்தி வசம் இருக்கும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டை மீட்டுத் தருமாறு மெட்டாவுக்கு ஜெயம் ரவி கோரிக்கை விடுத்திருந்தார். அண்மையில்தான் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து கிடைத்தது. இவர்கள் இருவருமே சேர்ந்த வாழ விரும்பவில்லை என்றனர். ஆனால் ஜெயம் ரவி விவகாரத்தில் ஆர்த்தி சேர்ந்து வாழ விரும்புகிறார்.