சென்னை: தமிழக அரசு தரப்பில் இருந்து காவிரி நீரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு நீரவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் - தமிழகம் இடையே காவிரி நீர் பங்கிட்டு கொள்வதில் வறட்சி காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. ஜூன் மாதமும் ஆகஸ்ட் மாதமும் மழை சரியாக பெய்யவில்லை. ஜூலையில் மட்டுமே ஓரளவு மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு 52 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.
ஆனால் நீர் குறைவான அளவே இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. தற்போது உள்ள 54 டிஎம்சி நீரை வைத்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியாத நிலை இருப்பதாக கர்நாடகா அரசு கூறி வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஆனால், நீர் இருப்பு குறைவாக உள்ளதாகக் கூறி கர்நாடக அரசு வழக்கம் போல பிடிவாதம் பிடித்தது. தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு அளித்த பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு செப்டம்பர் 12 ஆம் தேதி (இன்று) வரை வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு முக்கிய பரிந்துரையைச் செய்துள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையே கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் தரவில்லை. இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தேவை இல்லாமலேயே எதிர்க்கிறது.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் அம்மாநிலத்துக்கு தேவையான 177.25 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்கும். அதில் மாற்றம் இல்லை. மேகதாது அணை என்பது கர்நாடகாவுக்குள் கட்டப்பட இருக்கிறது. இதில் தேவையற்ற தொந்ததரவை தமிழ்நாடு அரசு தருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதால்தான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டோம். கர்நாடகா மாநில மக்களின் குடிநீர் தேவையையும் மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் செயல்படுகிறது.
கர்நாடகா மக்கள் நலனைப் பாதுகாக்கும் கடமை எங்களுக்கும் இருக்கிறது. நீர் பிரச்சனையில் குடிநீர்தான் முதன்மையானது" என்று சித்தராமையா கூறினார். இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் இருந்து காவிரி நீரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு நீரவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலு கூறியதாவது:-
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை தரமுடியாது என்ற கர்நாடக அமைச்சரின் கருத்தை தமிழக அரசு ஏற்காது. உச்ச நீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரை பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்யும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.