சென்னை: ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீதான நடவடிக்கை பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்டார் . இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் விழாவை புறக்கணித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் ஆகியோரின் பேச்சுக்கள் தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளன.
குறிப்பாக ஆதவ் அர்ஜுனா கூட்டணி கட்சி என்று கூட பாராமல் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில், ‛‛பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது. மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள். கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலை செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள்.
2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்'' என்று பேசினார். இதன்மூலம் திமுகவின் பெயரை குறிப்பிடாமல் ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
இதற்கிடையே தான் கூட்டணியில் இருந்து கொண்டே திமுக மற்றும் அதன் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவினர் மற்றும் திமுக தொண்டர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை செய்யும் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனை செல்வன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக எல்லாருக்குமான துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு திருமாவளவனிடம், ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருமாவளவன், ‛‛ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீதான நடவடிக்கை பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகளிடம் மேலும் ஆலோசனை மேற்கொண்டு தகவல் தெரிவிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage