கொரோனா தொற்று காலத்தில் இருந்து பல புதிய நிறுவனங்கள் கோயம்புத்தூரில் அலுவலகத்தை திறந்துள்ள காரணத்தால் இம்மாவட்டத்தின் மக்கள் தொகையும், தனிநபர் வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது என்றால் மிகையில்லை.
அதிலும் குறிப்பாக டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்களின் எண்ணிக்கையும், இத்துறை சார்ந்த ஊழியர்கள் எண்ணிக்கையும் கடந்த 5 வருடத்தில் தடாலடியாக உயர்ந்துள்ளது. இதனால் கோயம்புத்தூரில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு ரீடைல் நிறுவனங்களுக்கு உருவாகியுள்ளதால் முன்னணி பிராண்டுகள் தனது புதிய ரீடைல் கடைகளை கோயம்புத்தூரில் துவங்கி அசத்தி வந்தது.
இதற்கு மகுடமாக அடுத்தடுத்து புதிய மால்களின் கட்டுமானங்கள் துவங்கப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு நாடுகளிலும், கேரளாவிலும் பிரபலமான லூலூ மால் கோயம்புத்தூரில் துவங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இதை இந்நகரத்தின் மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் கட்டிடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
சில வாரங்களுக்கு முன்பு புதிய லூலூ மால் கட்டிடத்தின் புகைப்படம் வெளியாகி மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த புதிய மால் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் புதிய ஷாப்பிங் பகுதி கிடைத்துள்ளது. சமீபத்தில் லூலூ மால் பெங்களூரில் திறக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இங்கு விற்பனை செய்யப்படும் தந்தூரி சிக்கன், கேக் மற்றும் பிற உணவு பொருட்கள் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் பெங்களூர் லூலூ மாலில் மீன், கோழி, ஆட்டு இறைச்சி விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படும் வேளையில் இதெல்லாம் கோயம்புத்தூர் லூலூ மால்களிலும் இருக்குமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகில் பிராட்வே மால் திறக்கப்பட்டது, இந்த மாலில் சினிமா தியேட்டர்கள் முக்கிய அம்சமாக இருந்த நிலையில் லூலூ மால் எப்படி இருக்கும்..? தமிழ்நாட்டின் முதல் லூலூ மால் கோயம்புத்தூரில் அமையும் வேளையில் விரைவில் சென்னையில் மற்றொரு மால் திறக்கப்பட உள்ளது.