1,500 வாடகை.. வாய்ப்பு தந்த முதல் சீரியல்! பரோட்டாவே பிடிக்காது: சூரி சொன்ன உண்மைகள்..!

post-img
சென்னை: வெற்றிமாறன் இயக்கி உள்ள 'விடுதலை 2’ வெளியாக இருக்கும் நிலையில், ஒரு காலத்தில் 1500 ரூபாய் அறை வாடகை கொடுக்க முடியாமல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்ததாக நடிகர் சூரி தெரிவித்திருக்கிறார். வெற்றிமாறனின் 'விடுதலை 2’ வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் முதல் பாகம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இதற்கு ஒரு நல்ல ஓபனிங் ரசிகர்களிடையே இருக்கிறது. சமீபத்தில் நடந்த இதன் இசை வெளியீட்டு விழாவில் சூரியிடம் இசையமைப்பாளர் இளையராஜா நடந்து கொண்ட விதம் சில சர்ச்சைகளை உண்டாக்கி இருந்தது. அதே மேடையில் வெற்றிமாறன் தனது உதவியாளர்கள் பெயரை வெளிப்படுத்தாது பற்றியும் சிலர் எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தன. சாதாரண காமெடியனாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய சூரி ஆரம்பக் காலங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படங்கள் பெரிய வரவேற்பை அடைந்தன. அதன்பிறகு சிவா ஹீரோ அளவுக்கு முன்னேறினார். அதே காலகட்டத்தில் சூரி தனித்து சில படங்களில் நடித்துவந்தார். இவரை 'விடுதலை’ ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் அளவுக்கு மாற்றியது. அதற்குக் காரணம் வெற்றிமாறன். சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு’ வெளியாகும் அவரை தன் சினிமா வாழ்க்கை மீது பயம் இருந்ததாக நடிகர் சூரி கூறியுள்ளார். மாதம் 1,500 ரூபாய் வாடகையில் வாழ்ந்து வந்த தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அந்தப் படம்தான் என்றும் அதை வைத்துத்தான் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தைரியம் வந்தது என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்திற்குப் பின் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் 'பரோட்டா’ காமெடி கொடுத்த அடையாளத்தை வைத்து டிவி சீரியல்களில் வாய்ப்பு பெற்று வாழ்க்கையைச் சமாளித்துவிடலாம் என நம்பிக் கொண்டிருந்ததாக அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் மதன் கெளரி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சூரி பேசுகையில், “1997இல் சினிமாவுக்காக சென்னைக்கு வந்தேன். நான் பார்க்காத வேலையே இல்லை. அவ்வளவு வேலை பார்த்துவிட்டேன். பல படங்களில் செட் போடும் ஆளாக வேலை பார்த்திருக்கிறேன். அப்படியான படங்களில் படத்தின் ஸ்கிரிப்ட்டில் 'சார் போஸ்ட்’, 'ஐயா கொஞ்சம் வாங்க’ என ஒருவரி டயலாக் இருக்கும். அதைத் திரைக்கதையில் பெயர் போட்டு எழுத மாட்டார்கள். 'ஒருவன்’ என்று போட்டு இருப்பார்கள். அதை யார் செட்டில் உள்ள யாரை வைத்தாவது எடுப்பார்கள். அப்படிப் பல படங்களில் இந்த ஒருவரி டயலாக்கை பேசி நடித்திருக்கிறேன். அப்படி முதன்முறையாக 'மந்திர வாசல்’ என்ற சீரியலில் ஒருவரி வசனத்தைப் பேசினேன். அதன்பின் சுந்தர் சி இயக்கிய 'கண்ணன் வருவான்’ . சினிமாவில் முதல் வசனம் கவுண்டமணியுடன் பேசியதுதான். சென்னையில் சினிமா வாய்ப்பு தேடிய காலங்களில் தனிப்பட முறையில் இவரே நாடகங்கள் போட்டிருக்கிறார். அதை வைத்து 'காதல்’ போன்ற படங்களில் சில காட்சிகளில் மட்டும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவரை அதிக அளவில் கவனிக்க வைத்தது 'வெண்ணிலா கபடி குழு’ பரோட்டா காட்சிதான். அதனால் தான் பரோட்டா சூரி என அவரை அடைமொழி போட்டும் கூப்பிடும் அளவுக்கு வளர வைத்தது. எந்தப் பரோட்டா அவருக்கு சினிமாவில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோ, அந்தப் பரோட்டாவே தனக்குப் பிடிக்காது என்றும் சூரி தெரிவித்துள்ளார். அதைச் சாப்பிட்டது இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோவில் கருத்திட்டுள்ள நெட்டிசன்கள் இவரது வெற்றியைப் பற்றி பெருமையாகப் பேசி இருக்கின்றனர். சூரியின் பூர்வீகம் மதுரைதான். அங்கே அவரது உணவகம் ஒன்றைத் திறந்து அதை தன் உறவினர்களை வைத்து நடத்தி வருகிறார். இது மலிவு விலை உணவகம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Related Post