பொங்கல் விழா நாட்களில் யுஜிசி நெட் தேர்வு நடத்துவதா? மத்திய அரசுக்கு கி.வீரமணி, கனிமொழி கண்டனம்!

post-img
டெல்லி: தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாட்களில் யுஜிசியானது நெட் தேர்வு நடத்த கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். பொங்கல் நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராசிரியர் தகுதித் தேர்வு (NET) நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்பி கடிதம் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: தமிழர் திருநாளாம் பொங்கலும் அதையொட்டி அடுத்த இரண்டு நாள்களும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள்கள்; பொங்கல் மதச்சார்பற்ற உழைப்பாளர்கள், உழவர்களின் திருவிழாக்கள்! ஆரியப் பார்ப்பனர்களின் அடையாளத் திணிப்புக்குள் அடங்காத நாள்கள். தை முதல்நாளை ஒட்டி 2025-ஆம் ஆண்டு ஜனவரி 14,15,16 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டிலும், பிற நாடுகளிலும் வசிப்பவர்கள் கூட, தம் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்பாட்டை நினைவுகூர்ந்து மகிழத் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நடத்தும் தேசியத் தகுதித் தேர்வுகளுக்கான (NET) கால அட்டவணையை வெளியிட்டுள்ள தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) அதில் ஜனவரி 15,16 ஆகிய தேதிகளிலும் தேர்வுகளை அறிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான இருபால் தமிழ் இளைஞர்கள் எழுதக் கூடிய தேர்வைத் தமிழர்களின் திருநாள் மகிழ்வைக் கொண்டாட முடியாமல் இடையூறு செய்யும் வகையில் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை மடைமாற்ற, தடையேற்படுத்தத் தொடர்ந்து இத்தகைய செயல்களில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவும் அத்தகைய ஒன்றே ஆகும். 2023-இல் இதே நாள்களில் வங்கித் தேர்வுகளை அறிவித்தனர். 2025-க்கே சி.ஏ. தேர்வுகளை அறிவித்து கண்டனத்திற்குள்ளாகியும் உள்ளது பா.ஜ.க. அரசு! ஆனாலும், தமிழர்களின் குரல்களைக் கேட்க மனமின்றி தொடர்ந்து, இத்தகைய பண்பாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது. இத் தேர்வு அட்டவணை உடனடியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் (ஜன 15,16) நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) - பேராசிரியர் தகுதித் தேர்வு (NET) நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய‌ கல்வித்துறை அமைச்சருக்கு அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். சமீபத்தில்தான், தேசிய அளவிலான CA தேர்வுகளின் தேதியை மாற்றக் கோரி எதிர்குரல் எழுப்பி அது மாற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே நாளில் வேறொரு தேசியத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டின் பண்பாடு - கலாச்சாரம் - உணர்வுகள் என எதையும் மதிக்காமல், மத்திய ஆதிக்கத்தைத் திணித்து வரும் பாஜக அரசு உடனடியாக அதன் தமிழர் விரோதச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இதேபோல சிபிஎம் எம்பி சு.வெங்கடேசனும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Related Post