பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியேர் அரசு கவிழ்ப்பு!

post-img

பாரீஸ்: பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியேர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது. பிரான்ஸ் பிரதமராக கடந்த செப்டம்பர் மாதம் மிஷேல் பார்னியை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 3 மாதங்களிலேயே அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார்.

பிரான்ஸ் தேர்தலில் அதிபர் மேக்ரோனின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷேல் பார்னியேர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மிஷேர் பார்னியேர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியேர் 2025-ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் மேக்ரோனின் அனுமதியுடன் பட்ஜெட்டை எப்படியும் நிறைவேற்றுவேன் என மிஷேல் பார்னியேர் கூறியிருந்தார்.
இப்பின்னணியில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியேருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்ததால் ஆட்சியை பறிகொடுத்தார். பிரான்ஸ் வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து தமது பிரதமர் பதவியை மிஷேல் பார்னியேர் ராஜினாமா செய்தார். இது அதிபர் மேக்ரோனுக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பிரான்ஸில் மிக குறுகிய காலமாக 3 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் மிஷேல் பார்னியர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரான்ஸின் புதிய பிரதமர் யார் என்பதை அதிபர் மேக்ரோன் அறிவிக்க இருக்கிறார்.

Related Post