சென்னையில் கல்யாணத்திற்கு முன்பே ஒத்திகை.. மாமியார் வீட்டிற்கு போக வேண்டியவருக்கு இப்படி ஆகிடுச்சு

post-img
சென்னை: சென்னை மணலியை சேர்ந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினியரை ஆன்லைன் திருமண வலைதளம் அணுகிய வேலூர் மாவட்டம் குடியாத்தைச் சேர்ந்த இளைஞர், தான் சென்னையில் உள்ள பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், கைநிறைய சம்பாதிப்பதாக கூறியுள்ளார். அவரை நேரில் பார்த்து திருமணத்திற்கு பெற்றோரும் நாள் குறித்தனர். இந்த சூழலில் திருமணத்துக்கு முன்பே பெண்ணுடன் முதலிரவு ஒத்திகை பார்க்க அந்த இளைஞர் ஆசைப்பட்டுள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம். இன்றைக்கு திருமணத்திற்கு பெண் தேடுவது என்பதோ, மாப்பிள்ளை தேடுவது என்பதோ திருமண வலைதளங்களில் தான் நடக்கிறது. திருமண ஆப்களில் தான் வரன்களை தேடும் நிலை மாறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சில போலிகளும் இருக்கிறார்கள். சிலர் அதிக சம்பளம் சம்பாதிப்பதாக டிப்டாப் புகைப்படம் போட்டு ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் நன்றாக சம்பாதிப்பவர், அழகானவர் என்று மட்டும் பார்த்து ஒருவரை தேர்வு செய்வதும் நடக்கிறது. இதில் அவர்களின் உண்மையான குணம் வெளிவரும் போது பெரிய சிக்கலும் ஏற்படுவது உண்டு. சென்னை மணலியை சேர்ந்த 24 வயதாகும் இளம்பெண் கம்ப்யூட்டர் என்ஜினியருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடியுள்ளனர். இதற்காக தங்களது மகளின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் சுய விவரங்களை பிரபல திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு புதிய அழைப்புகள் வந்துள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த 28 வயதாகும் பூர்ணநாதன் என்பவர் அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் பேசியிருக்கிறார். அவர் அந்த பெண்ணிடம் என்ஜினியர் என்றும் சென்னை மேற்கு மாம்பலத்தில் விடுதியில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் புகைப்படத்தை பார்த்தாகவும், மிகவும் அழகாக இருக்கும் உங்களை திருமணம் செய்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன் என்று வசீகரிக்கும் வார்த்தைகளில் பேசியுள்ளார். பூர்ணநாதனின் வசீகர பேச்சு மற்றும் அணுகுமுறையால் பெண் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்து போனது. திருமணத்துக்கு நாள் குறிக்க தொடங்கினார்கள். இதனால் அந்த பெண்ணும் பூர்ணநாதனும் காதலிக்க தொடங்கி உள்ளார்கள். செல்போனில் பேசுவது,. வாட்ஸ்-அப்பில் உரையாடுவது என்று மாறிப்போனார்கள். இந்த நிலையில் பூர்ணநாதன், அதிகாலையில் உன்னை பார்த்து ரசிக்க வேண்டும் என்று அழைத்துள்ளார். வருங்கால கணவர் அழைக்கிறார் என்று நினைத்து வீட்டில் சொல்லிவிட்டு வந்துள்ளார். மேற்கு மாம்பலத்தில் பூர்ணநாதன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு அப்போதுதான் நடக்க போகும் சிக்கல் தெரிந்தது வீட்டில் நுழைந்தவுடன் கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கினார். கணவன்-மனைவியாக வாழப்போகும் நாம் ஒத்திகை பார்க்கலாம் என்று இளம்பெண்ணை வலையில் வீழ்த்த முயற்சித்தார். ஆனால் அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பூர்ணநாதன் ஆவேசமாக நடந்து கொண்டாராம். பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டாராம். தொடர்ந்து பூர்ணநாதனின் நடவடிக்கையை கண்டு வெகுண்டெழுந்த பெண், சென்னை குமரன் நகர் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவங்களை விவரித்து புகார் மனுவாக அளித்தார். அதன் பேரில் குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூர்ணநாதனை கைது செய்தனர். திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு போக வேண்டிய மாப்பிள்ளை, திருமணத்திற்கு முன்பே அவசரப்பட்டதால் ஜெயிலுக்கு போகிறார்.

Related Post