வாயை விட்டு மாட்டிக் கொண்ட ரங்கராஜன் நரசிம்மன்..இனி பேசக் கூடாது! நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

post-img
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசிய ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் கோவில் விவகாரங்கள் தொடர்பாக யூட்யூப் சேனல்களில் பேசி வருவதோடு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வருகிறார். மேலும் திமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார். மேலும் மடாதிபதிகள், ஜீயர்கள் குறித்தும் அவர் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்தான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினையும், 3 ஜீயர்களையும் இணைத்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது ரங்கராஜன் நரசிம்மன்: இது தொடர்பாக ஜீயர் அளித்த புகாரின் பேரில் 16ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது பெண் வழக்கறிஞர் குறித்து அவதூறாக பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உயர்நீதிமன்றம்: இந்த நிலையில் ரங்கராஜன் நரசிம்மனை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக அவரது மகன் முகுந்தன் ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கைது சட்டவிரோதமானது என அறிவித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவரை விமர்சித்து வழக்கிலும். ஜாமினில் விடுவிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மகன் வாதம்: இந்த இரு மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது அப்போது முகுந்தன் ரங்கராஜன் தரப்பில் தனது தந்தை கைது குறித்து முறையான நோட்டீஸ் வழங்கப்படவில்லை எனவும், கைது நடவடிக்கையின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என வாதிட்டார். மேலும் மற்ற வழக்குகளிலும் அவர் கைது செய்வதை தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். காவல்துறை எதிர்ப்பு: மேலும் தனது தந்தை சிறையில் உணவு எடுத்துக் கொள்ளவில்லை எனவும், தனது வீட்டுக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய சட்ட விதிகளை பின்பற்றி தான் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டதாகவும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் உரிய மனு அளித்தால் அவரது வீட்டுக்கு வைக்கப்பட்ட சில அகற்றப்படும் எனவும் கூறினார். நிபந்தனை ஜாமீன்: மேலும் ரங்கராஜன் பேசிய வீடியோக்களும் நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ரங்கராஜ் நரசிம்மன் வீடியோக்களை பார்வையிட்ட நீதிபதி இருதரப்பு வாதங்களின் அடிப்படையில் ரங்கராஜன் நரசிம்மனை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மடாதிபதிகளை பற்றி பேசக்கூடாது, சாட்சிகளை மிரட்டக் கூடாது, அவர்களை தொடர்பு கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின் 25ஆம் தேதி ரங்கராஜன் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post