ராமநாதபுரம்: புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நமக்கே தெரியாமல் நமக்கு எதிராக நடைபெறும் சதிகளை கண்டுபிடித்துவிட முடியும். இங்கு நம்மை ஏமாற்றுபவர்கள் முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் கவனமாக இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும். இந்திய அளவில் புகழ் பெற்ற ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய படம் பிடித்த இளைஞர்களை எப்படி ஒரு பெண் கண்டுபிடித்தார் என்பதை பார்ப்போம்.
வட இந்தியாவில் காசியும் (வாரணாசி) தென்னிந்தியாவில் ராமேஸ்வரமும் இந்துக்களின் புனித தலங்களில் மிகவும் முக்கியமானது. காசிக்கு எப்படி தென்னிந்தியாவில் இருந்து செல்கிறார்களோ, அதேபோல் மொத்த வட இந்தியாவில் உள்ள இந்துக்களும் ராமேஸ்வரம் வருவதை தங்கள் வாழ்நாளின் முக்கியமான புனிய யாத்திரையாக கருதுகிறார்கள். இதனால் எப்போதுமே ராமேஸ்வரத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிவிட்டு , ராமர் வந்து சென்றதாக நம்பப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று, அங்குள்ள தீர்த்தக்கிணறுகளிலும் நீராடியபின், சாமி தரிசனம் செய்வார்கள். வட இந்தியாவில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தே மக்கள் வருகை தருவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வருவார்கள்.
அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள். பின்னர் ராமேஸ்வரம் கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக கட்டணம் கொடுத்துள்ளனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த டீ மாஸ்டர், வயதான பெண்களை ஒரு அறைக்கும், இளம்பெண்களை மற்றொரு அறைக்கும் செல்லுமாறு கூறினாராம். இதில் சந்தேகம் அடைந்த ஒரு இளம்பெண், துணி மாற்றுவதற்காக சென்று பார்த்துள்ளார். பின்னர் அறை சுவரை முழுவதுமாக கவனித்திருக்கிறார். அப்போது அந்த அறையின் கருப்பு நிற டைல்ஸ் கற்களுக்கு நடுவே கருப்பு நிறத்தில் ரகசியமாக கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். பின்னர் கையால் அந்த கேமராவை கைப்பற்றிய அந்த பெண், அவரது தந்தையிடம் கொடுத்தார்.
இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து ராமேஸ்வரம் டிஎஸ்பி சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார் கேமராவை கைப்பற்றியதுடன் உடை மாற்றுவதற்காக வரும் பெண்களை அந்தரங்கமாக படம் பிடிப்பதற்காக கேமரா வைத்திருந்ததாக டீக்கடை நடத்தி வரும் ராமேசுவரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (வயது 34), அந்த கடையில் வேலை பார்க்கும் டீ மாஸ்டர் ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த மீரான்மைதீன் (34) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். பின்னர் கோவில் காவல்நிலைய போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் சுவரில் கருப்பு மற்றும் வெள்ளை கலரில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. அந்த டைல்ஸ் கற்களுக்கு இடையே இளம்பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடிக்க ஆன்லைனில் கருப்பு நிற கேமராவை ஆன்லைனில் வாங்கி பொருத்தியுள்ளார்கள்.
கருப்பு நிற டைல்ஸ் கற்களின் நடுவே இருந்ததால் யாராலும் எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்துள்ளது. நிறைய பெண்களின் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.