இனி அமெரிக்காவுக்கு விசா பெறுவது ஈஸி.. அமலுக்கு வரும் மேஜர் மாற்றங்கள்.. இந்தியர்களுக்கு நல்ல செய்தி

post-img
வாஷிங்டன்: பொதுவாகவே இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் நீண்ட வரிசையில் மக்கல் நிற்பதைப் பார்த்து இருப்போம். சென்னை உட்பட அமெரிக்கத் தூதரகங்கள் இருக்கும் எல்லா இடங்களில் இதே நிலை தான். இதற்கிடையே விசா நேர்காணல்களை எளிமையாக்குவது தொடர்பாக அமெரிக்கா இரு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது இந்தியர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், இந்தியா செல்லும் அமெரிக்கர்களுக்கு எளிதாக விசா கிடைப்பதில்லை. இதற்கிடையே விசா தொடர்பாக இரு முக்கிய மாற்றங்களை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதாவது குடியேற்றம் இல்லாத விசா நேர்காணலை புக் செய்வது மற்றும் அதை மாற்றுவது தொடர்பாக புதிய விதிமுறைகள் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் வரும் ஜன. 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விசா: இந்த புதிய விசா விதிகளின் கீழ், விசா பெற விரும்புவோர் ஒரே ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும். பிறகு கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தங்கள் அப்பாயிண்ட்மெண்ட்டை மாற்றிக் கொள்ளலாம். அதேநேரம் ஒரே ஒரு முறை மட்டுமே இப்படி இலவசமாக அப்பாயிண்ட்மெண்ட்டை மாற்ற முடியும். அதையும் மிஸ் செய்தால் அல்லது மீண்டும் அப்பாயிண்ட்மெண்ட்டை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு மீண்டும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைவரும் எளிதாகவும் விரைவாகவும் அப்பாயிண்ட்மெண்ட் பெற இது உதவும் என்றும் இந்தியாவில் உள்ள அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் கூறுகையில், "ஜனவரி 1, 2025 முதல், நீங்கள் விரும்பும் இடத்தில் உங்கள் முதல் விசா அப்பாயிண்ட்மெண்ட்டை திட்டமிடலாம். ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட் மாற்ற விரும்பினால், அதை ஒரு முறை இலவசமாகச் செய்யலாம். இலவசம்: இருப்பினும், அப்போதும் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட்டை தவறவிட்டால் அல்லது மீண்டும் மாற்ற விரும்பினால், புதிதாக அப்பாயிண்ட்மெண்ட்டை புக் செய்து விண்ணப்பக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். காத்திருப்பு நேரம் அதிகமாக இருப்பதால் நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட்டை புக் செய்யும் தேதியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட இந்தியர்கள் விசாவுக்கு காத்திருக்கும் நேரம் அதிகமாகவே இருக்கிறது. தற்போது B1/B2 விசாவுக்கு மும்பையில் 438 நாட்கள், சென்னையில் 479 நாட்கள், டெல்லியில் 441 நாட்கள், கொல்கத்தாவில் 436 நாட்கள் மற்றும் ஹைதராபாத்தில் 429 நாட்களும் காத்திருப்பு நேரம் இருக்கிறது. மாணவர் விசாவை பொறுத்தவரை மும்பையில் 193 நாட்கள், சென்னையில் 106 நாட்கள், டெல்லியில் 150 நாட்கள், கொல்கத்தாவில் 143 நாட்கள் மற்றும் ஹைதராபாத்தில் 115 நாட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மேஜர் மாற்றம்: அதேபோல H-1B விசா செயல்முறை தொடர்பாக புதிய விதிகளை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சமீபத்தில் தான் அறிவித்து இருந்த நிலையில், இந்த புதிய மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. புதிய H-1B விசா செயல்முறை மூலம் முக்கியமான துறைகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.. இது ஜன. 17ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் அதிகளவில் H-1B விசா பெறுவோராக இந்தியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அறிவிப்புகளுமே இந்தியர்களுக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இவை நேர்காணலைச் சீர்படுத்தவும் காத்திருப்பு நேரத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசா பெற அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்யவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Related Post