சென்னை: சில மூலிகைகளையும், கீரைகளையும் நாம் சமையலில் பயன்படுத்தாமலேயே தவிர்த்துவிடுகிறோம்.. நம்முடைய முன்னோர்கள், வீடுகளில் கட்டாயமாக வைத்திருந்த மூலிகைதான் நேத்திரப்பூண்டு.. அந்த அளவுக்கு மருத்துவ குணம் நிறைந்தது இந்த நேத்திரப்பூண்டு இலைகள்.
நேத்திரப்பூண்டு தரையோடு தரையாக கொடி போல படர்ந்து காணப்படும்.. ஆனால், எல்லா இடங்களிலும் இது வளராது. சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகமாக காணப்படுகிறது. இதன் தண்டை ஒடித்துவிட்டு மறுபடியும் பொருத்தினால், மறுபடியும் பொருந்திக்கொள்ளும்.. அதனால்தான் கன்னியாகுமரி பகுதிகளில் இதனை ஆற்றலை பொருத்தி என்று சொல்வார்களாம்.
4 கண்கள்: பார்ப்பதற்கே, 4, 4, இலைகளாக இருக்கும்.. 4 இலைகள் கூட்டாக காணப்படுவது இந்த மூலிகையில்தான்.. அதுவும் மனிதனின் கண்ணை போலவே இருக்கும். அதனால்தானோ என்னவோ, கண்களை காப்பதில், இந்த மூலிகை முதன்மையிடத்தில் உள்ளது. இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி வைத்து கொண்டு பயன்படுத்தலாம்.
அல்லது, நல்லெண்ணெய் பயன்படுத்தியும், வேறுவகையில் தயார் செய்யலாம்.. ஒரு லிட்டர் நல்லெண்ணெய்க்கு, அரைகிலோ நேத்திரப்பூண்டு இலைகளை சேர்த்து, தும்பை இலை, கரிசாலை, பொன்னாங்கண்ணி, கற்றாழை, என தலா 100 ரூபாய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.. அதனை நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தி கொள்ளலாம்.
தீர்க்கும் நோய்கள்: கண் எரிச்சல், கண்ணில் பூவிழுதல், கண்ணில் சதை வளருதல், ஒற்றை தலைவலி, கண்புரை, கண் நோய் என கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால், இந்த எண்ணெய்யில் 2 சொட்டுகள் விட்டு வந்தாலே போதும்.. கண்கள் நலன் முழுமையாக காக்கப்படும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நேத்திரப் பூண்டு இலைகள் விற்கப்படுகின்றன.. அதேபோல, இந்த இலையின் தைலமும் விற்கப்படுகின்றன..
அதேபோல, மூக்கிரட்டை கீரையை சமையலில் தவிர்த்துவிடுகிறோம்.. இந்த கீரையை உணவில் எடுத்துக்கொண்டு வந்தால், சில மாதங்களில் உடல் எடை குறைய தொடங்குமாம்.
மஞ்சள் காமாலை: அதுமட்டுமல்ல, "சிறுநீரகத்தின் நண்பன்" என்றே இந்த கீரையை சொல்லலாம். காரணம், சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அவைகளை கரைத்து நீக்கிவிடும் தன்மை இந்த கீரைக்கு உண்டு. சிறுநீரக தொற்று முதல் மஞ்சள் காமாலை வரை அத்தனை பிரச்சனையையும் இந்த கீரை தீர்க்கிறது. அதனால்தான் காமாலை வந்தவர்களுக்கு, கீழாநெல்லியுடன் இந்த கீரையையும் சேர்த்து தருவார்கள்.
அதைவிட முக்கியமாக, இந்த கீரையும் கண்களின் பாதுகாப்பை பெருக்குகிறது.. வெறுமனே இந்த கீரையை விழுதுபோல அரைத்து, கண்களின் மேல் தடவி வந்தாலே இமை வீக்கங்கள் குணமாகிவிடும்.. கண்கள் குளிர்ச்சி பெறும்.. இந்த செடியின் வேரினை காயவைத்து, அரைத்து தூளாக்கி, சுடுநீரில் குடித்துவந்தாலும், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்.