முன்பதிவில்லாத பொது பெட்டிகளில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு 20 ரூபாய்க்கு தரமான உணவு வழங்கும் திட்டத்தை ரயில்வே தொடங்கியுள்ளது.
ரயில்களில் முன்பதிவில்லாத பொது பெட்டிகளானது ( General Sitting - GS) ரயிலின் எஞ்சின் அருகிலும், ரயிலின் கடைசி பெட்டியாகவும் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சம் இரண்டு முன்பதிவில்லாத பொது பெட்டிகள் இருக்கும்.
இந்த பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றுக்காக அல்லாடும் நிலை உள்ளது. ரயில் நிலையங்களிலும் கூடுதல் விலைக்கே வாங்க வேண்டியிருந்த நிலையில், இதனை கருத்தில் கொண்டு, வடக்கு மண்டலத்தில் உள்ள 59 ரயில் நிலையங்களில் மலிவு விலைக்கு உணவு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 14 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் நிற்கும் நடைமேடைகள் அருகே, இதற்காக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
7 பூரிகள் மற்றும் உருளைக்கிழங்கு, ஊறுகாய் அடங்கிய மலிவு விலை உணவு 20 ரூபாய்க்கும், அரிசி சாதம், கிச்சடி, மசாலா தோசை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று காம்போ உணவு வகையாக 50 ரூபாய்க்கும் விநியோகம் செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே பி.ஆர்.ஓ.ராஜேஷ் காரே தெரிவித்துள்ளார்.