ஏதோ மிகவும் தவறாக இருக்கிறது.. உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று நடந்த வாதம் என்ன?

post-img
டெல்லி: ஜாமீனில் விடுதலையான உடனே ஒரு நபர் அமைச்சராவது கேள்விக்கு அப்பாற்றப்பட்டதல்ல.. ஆனால் இதில் ஏதோ மிகவும் தவறாக இருக்கிறது. இதனால்தான் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம்.உச்ச நீதிமன்றத்துடன் விளையாடி இருப்பதாக தோன்றுகிறது. செந்தில் பாலாஜியின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு பலர் ஜாமீன் பெற்று வருகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நேற்று நடந்த வாதங்களை பற்றி பார்ப்போம். அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தது தொடர்பாக வழக்கு உள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை , 2023, ஜூன் 14ம் தேதி கைது செய்தது. ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணை கைதியாகவே இருப்பதனால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது. உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சிறையில் இருந்து வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் (போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்), செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சி விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை அமைச்சராக்கியது மிகவும் தவறானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று நடந்த வாதம் என்ன: செந்தில் பாலாஜிக்கு ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும் போது, இந்த வழக்கில் ஏராளமான பாதிக்கப்பட்டோரும், சாட்சிகளும் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதால் சாட்சிகளின் நிலை என்னவாகும்? இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசின் கருத்தை அறிய விரும்புகிறோம் என்று கருத்து தெரிவித்தனர். தமிழக அரசு எதிர்மனுதாரர் அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மனுதாரர் வித்யா குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கர நாராயணன் வாதிடுகையில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். அமலாக்கத் துறையின் சாட்சி கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் 3 இலாக்கக்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றார். செந்தில் பாலாஜி தரப்பு வாதம் அதனை தொடர்ந்து அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதே அதுவும் இலாக்கா இல்லாத அமைச்ராக இருந்தபோதே அதிகாரமிக்கவராக இருந்தார் என்று குறிப்பிட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வக்கீல் கபில் சிபல், பலர் அரசிலும், இங்கும் இலாக்கா இல்லாமல் அதிகாரமிக்கவர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். ஏதோ மிகவும் தவறாக இருக்கிறது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் கூறும் போது, இந்த வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். ஜாமீனில் விடுதலையான உடனே ஒரு நபர் அமைச்சராவது கேள்விக்கு அப்பாற்றப்பட்டது இல்லை. இதில் ஏதோ மிகவும் தவறாக இருக்கிறது. இதனால்தான் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். உச்ச நீதிமன்றத்துடன் விளையாடி இருப்பதாக தோன்றுகிறது. செந்தில் பாலாஜியின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு பலர் ஜாமீன் பெற்று வருகின்றனர். அதனால்தான் ஜாமீன் தீர்ப்பை கவனத்துடன் எழுதியுள்ளோம் என்று கூறினார்கள். செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்குகள் பின்னர் தொடர்ந்து நடந்த அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் உள்துறையை எதிர் மனுதாரராக சேர்க்க அனுமதித்தது. மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள், விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகள், சாட்சிகளாகவுள்ள பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளாகவுள்ள அரசு ஊழியர்கள் ஆகிய விவரங்களை ஜனவரி 15-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Post