திண்டுக்கல்: திண்டுக்கல்லில் டாக்டர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ31 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்களில் பல்வேறு வழக்குகளின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.
அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தி இருந்தனர். தற்போது மணல் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறையில் பதிவு செய்வதாக கூறிக் கொண்ட அங்கித் திவாரி.
இதில் முதல் கட்டமாக ரூ20 லட்சம் தர ஒப்புக் கொண்டார் டாக்டர் சுரேஷ் பாபு. கடந்த மாதம் ரூ20 லட்சம் பெற்றுக் கொண்டார் அங்கித் திவாரி. ஆனால் மேலும் ரூ31 லட்சம் தந்தாக வேண்டும் என டாக்டர் சுரேஷ் பாபுவை அங்கித் திவாரி மிரட்டி இருக்கிறார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். அவரிடம் ரூ31 லட்சம் பெற்றுக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார் அங்கித் திவாரி. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடாமல் துரத்திச் சென்று திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அங்கித் திவாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது அங்கித் திவாரியின் காரில் இருந்த லஞ்சப் பணம் ரூ31 லட்சப் பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். பின்னர் அங்கித் திவாரியை கைது செய்து 12 மணிநேரத்துக்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.