பெங்களூர்: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) கர்நாடகா மாநிலத்தின் தலைவராக மத்திய அமைச்சர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி நியமிக்கப்பட இருப்பதாக அக்கட்சியின் நிறுவனரான முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில தலைவர் பொறுப்பை தற்போது வகித்து வரும் மத்திய அமைச்சர் குமாரசாமியின் பணிசுமையை குறைக்க நிகில் குமாரசாமி ஜேடிஎஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் தேவகவுடா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இயங்கக் கூடிய கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம். பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைக்கக் கூடியது இந்தக் கட்சி.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஒக்கலிகா கவுடா வாக்குகளை அள்ளியதால் மதச்சார்பற்ற ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஜேடிஎஸ். இதற்கு மாநில தலைவராக இருந்த சிஎம் இப்ராகிம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இப்ராகிம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து மத்திய அமைச்சர் குமாரசாமி, ஜேடிஎஸ் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, மத்திய அமைச்சர் பதவியுடன் மாநில தலைவர் பதவியை குமாரசாமி கவனித்து வருகிறார். இதனால் அவருக்கு பணி நெருக்கடியாக உள்ளது. இதனையடுத்தே நிகில் குமாரசாமி, ஜேடிஎஸ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்றார்.
நிகில் குமாரசாமி, சட்டசபை தேர்தல்- லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அண்மையில் நடைபெற்ற சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி இருந்தார் நிகில் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage