நாட்டில் அரசின் கையிருப்பை விட மக்களிடம் இருக்கும் தங்கம் அதிகம்.. எவ்வளவு வச்சிருக்காங்க தெரியுமா?

post-img
டெல்லி: சர்வதேச அளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்து நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியர்களிடம் தான் அதிக அளவில் தங்கம் இருக்கிறதாம்.. இந்தியர்களின் வீடுகளில் 25,537 டன் தங்கம் இருப்பு உள்ளதாம். இதன் மதிப்பு தோராயமாக ரூ.193 லட்சம் கோடி என்றும் தரவுகள் கூறுகின்றன. தங்கம் விலை என்னதான் விண்ணை முட்டும் அளவுக்கு உச்சத்தை எட்டினாலும் தங்க நகை மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் ஒருபோதும் குறைவது இல்லை. விஷேச நாட்கள், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்க நகைகளை வாங்கும் பழக்கம் பெண்களிடையே அதிகம் உள்ளது. தங்கத்தை பொறுத்தவரை ஒருவரின் பொருளாதார வலிமையை காட்டும் வகையில் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இது எந்த அளவு உண்மை என்று தெரியாது.. தங்கம் கையிருப்பு: ஆனால், ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை நிர்ணயிப்பதில் தங்கத்தின் கையிருப்புதான் மிக முக்கியமானதாக உள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி அதிகரிப்பு ஆகியவை காரணமாக தங்கத்தின் இருப்பை உலக நாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போலந்து, ஹங்கேரி, இந்தியா, உஸ்பெஸ்கிதான் உள்ளிட்ட நாடுகள் தங்கத்தின் இருப்பை அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா முதலிடம்: சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும் வைத்து இருக்கும் தங்க கையிருப்பு அளவை உலக தங்க கவுன்சில் வெளியிடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நான்கு காலாண்டுகளாக பிரித்து தங்க கையிருப்பை குறித்த புள்ளி விவரத்தை வெளியிடுகிறது. அதன்படி பார்த்தால், அதிக தங்கத்தை கையிருப்பில் வைத்து இருப்பது எதிபார்த்தது போலவே அமெரிக்காதான். அமெரிக்காவிடம் மட்டும் 8,133.46 டன் தங்கம் இருப்பு உள்ளது. 7வது இடத்தில் இந்தியா: அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ஜெர்மனி (3,351.53 டன்), இத்தாலி (2,451.84 டன்), பிரான்ஸ் (2,436.94 டன்), ரஷ்யா (2,335.85 டன்), சீனா (2,264.32 டன்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. அக்டோபர் - டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவிடம் 853.63 டன் தங்கம் இருப்பு இருப்பதாக உலக தங்க கவுன்சில் தரவுகள் கூறுகின்றன. மொத்த கையிருப்பு எவ்வளவு?: 2-வது காலாண்டில் 840.75 டன்னாகவும், முதல் காலாண்டில் 822.09 டன்னாகவும் தங்கம் இருப்பு இருந்துள்ளது. இந்தியா தன்னிடம் உள்ள தங்க கையிருப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.. இது இந்தியாவின் ரிசர்வ் வங்கியில் இருக்கும் இருப்பு ஆகும். இந்தியாவிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 72.179 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்கவிடம் உள்ள தங்க கையிருப்பின் மதிப்பு $687.73-ஆகும். மொத்த கையிருப்பில் 74.16 சதவிகிதம் அமெரிக்கா வைத்துள்ளது. இந்தியாவிடம் இருக்கும் தங்க கையிருப்பின் அளவு 10.13% ஆகும். மக்களிடம் இருக்கும் தங்கம்: இது மட்டும் இன்றி இந்தியர்களிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், இந்தியர்களின் வீடுகளில் 25,537 டன் தங்கம் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 193 லட்சம் கோடி இருக்கும். நடப்பு ஆண்டு முடிவதற்கு முன்பாக இந்த மதிப்பு ரூ.200 லட்சம் கோடியை தாண்டினாலும் வியப்பதற்கு இல்லையாம். இந்தியாவில் தான் அதிகம்: பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியர்களிடம் தான் அதிக அளவில் தங்கம் இருக்கிறதாம்.. தங்கம் விலை எவ்வளவு உயர்ந்து கொன்டே சென்றாலும் தங்க நகை மீதான ஈர்ப்பு மட்டும் மக்களுக்கு குறையாமல் இருக்கிறது. இதனால், இந்த மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் செல்லுமே தவிர குறை வாய்ப்பு இல்லை. நமது நாட்டில் தனிநபரை பொறுத்தவரை தங்கத்தில் வீட்டில் வைத்து இருக்க கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்: திருமணம் முடிந்த பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்து இருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை வைத்து இருக்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் தங்கம் வைத்து இருக்கலாம். இந்த அளவுக்குள் தங்கம் வைத்து இருந்தால் கணக்கு காட்ட வேண்டியது இல்லை. அதற்கு மேல் தங்கம் வீட்டில் வைத்து இருக்கலாம். ஆனால், அதற்கு முறையான ஆவணங்கள் வைத்து இருப்பது அவசியம். வருமான வரி சட்டங்களின் படி, தங்கம் வாங்கியதற்கான வருமான ஆதாயங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து இருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி அதிகப்படியான தங்கம் இருந்தால் சோதனையில் பறிமுதல் செய்யப்படும் நிலை ஏற்படும்.

Related Post