ஆன்மீக நிகழ்ச்சியில் தவளை விஷத்தை குடித்த பிரபல நடிகை.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

post-img

மெக்சிகோ சிட்டி: மதச் சடங்கு ஒன்றில் உடலைத் தூய்மைப்படுத்தும் என நம்பி ராட்சத இலை தவளையின் விஷம் கொண்ட பானத்தைப் பிரபல நடிகை மார்செலா எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் திடீரென அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போனதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குறிப்பிட்ட மதம் அல்லது சடங்களில் ஒருவருக்கு நம்பிக்கை இருப்பதில் தவறு இல்லை. சொல்லப் போனால் பல இக்கட்டான நேரங்களில் அந்த நம்பிக்கை தான் நமக்குக் கைகொடுக்கும்.
ஆனால், பகுத்தறிவு சிந்தனை இல்லாத சடங்குகளை நாம் முழுமையாக நம்பி அதைப் பின்பற்றினால் மோசமான விளைவுகளே இதனால் ஏற்படும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
நடிகை மார்செலா: வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ்.. இவர் மதச் சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். அங்கு உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் சடங்கு என்று ஒரு சிலர் வினோத சடங்கை நடத்தியுள்ளனர். ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை எடுத்துக் கொள்வதே இந்த சடங்காகும்.
ராட்சத இலை தவளை விஷம் நமது உடலில் சென்று, உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை எல்லாம் அழித்துவிடும் என்பதாலேயே இதுபோல செய்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இருந்த போதிலும் நடிகை மார்செலா இந்த சடங்கைச் செய்துள்ளார். இருப்பினும், சற்று நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போய் இருக்கிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விஷம்: நடிகை ஹீலர் அங்கு நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் தான் அமேசான் காடுகளில் வாழும் விஷம் கொண்ட ராட்சத இலை தவளையின் விஷத்தைக் கொண்ட பானத்தை அவர் குடித்து இருக்கிறார். இந்த பானம் உடலில் உள்ள நச்சுகளைச் சுத்தப்படுத்தும் என உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இது ஆபத்தானது என்பதால் ஏற்கனவே பல நாடுகளில் இந்த பானத்திற்குத் தடை விதித்து இருக்கிறது.
இந்த பானத்தைக் குடித்த சற்று நேரத்திலேயே நடிகை மார்செலாவுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.. இதனால் உடன் இருந்தவர்கள் மருத்துவமனை செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தனது உடலை இப்போது சுத்தமாவதாகவும் அதன் ஒரு பகுதியே இது எனச் சொல்லி அவர் மருத்துவ உதவியை நாட மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
உயிரிழப்பு: இருப்பினும், நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமாகியிருக்கிறது. இதையடுத்து நடிகை மார்செலா தனது தோழிக்குக் கால் செய்துள்ளார். அவரது தோழி அங்கு வருவதற்குள்ள மார்செலா உடல்நிலை மிக மோசமாகிவிட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். எவ்வளவு தாமதமாக மருத்துவமனைக்கு அவர் வந்தார் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ் மரணத்திற்கு மெக்சிகோவில் உள்ள பிரபல மபச்சே பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமிலும் பலரும் நடிகை மார்செலாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இதுபோன்ற சடங்குகளை யாரும் பின்பற்றக்கூடாது என்றும் பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

Related Post