ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகி ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்திற்குத் தலைவலி தரும் விவகாரமாக அது மாறியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியும் பவன் கல்யாணின் ஜனசேனாவும் கூட்டணி அமைத்து இந்த 2024 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. அதன்பின் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு தனது தலைமையிலான அமைச்சரவையில் ஜனசேனா நிறுவனர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுத்தார். இதை இந்தியா முழுவதும் உள்ள கூட்டணிக் கட்சிகள் பின்பற்றவேண்டும் எனப் பல அரசியல்வாதிகள் சுட்டிக் காட்டி பேசிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் கூட விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூட ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த பெருந்தன்மை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுக்கும் வரவேண்டும் எனச் சுட்டிக்காட்டி இருந்தார். ஒரு காலத்தில் பாஜகவுடன் மிகக் கடுமையான மோதல் போக்கைக் கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்ந்ததற்காக அதே கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இப்போது தெலுங்குத் தேசம் கட்சியின் கூட்டணியில் பாஜகவும் ஜனசேனாவும் தொடர்ந்து வருகின்றன.
மேல்மட்டத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பவன் கல்யாண் பங்கேற்று இருந்தாலும் தெலுங்கு தேசம் தொண்டர்கள் மற்றும் ஜனசேனா தொண்டர்கள் மத்தியில் ஒரு உரசல் போக்கு நீடித்து வருகிறது. அதற்கு மேலாகத் துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை எனில் உள்துறையைத் தானே ஏற்கவேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார். அதற்கு உள்துறை அமைச்சர் அங்கலபுடி அனிதா பதிலடி கொடுத்து இருந்தார். என்னதான் இரண்டு கட்சிகளும் அமைச்சரவையைப் பகிர்ந்துகொண்டாலும் இப்போதும் இந்த இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் ஒரு பூசல் நிலவிவருகிறது.
இதற்கு இப்போது வெளியாகி வைரலாகி வரும் வீடியோ ஒன்று சரியான தீனியைப் போட்டுள்ளது. ஜனசேனா மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் எக்ஸ் தளத்தில் அந்த காணொளியைப் போட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றன. அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது எனப் பலரும் கேட்கலாம். ஒரு விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை ஒருவர் வயர் வைத்து சவுக்கால் அடிப்பதைப் போல் வெளுத்து வாங்குகிறார். அதில் அடி தாங்க முடியாமல் தவிக்கும் மாணவர் கதறுகிறார்.
இந்த வீடியோ தொடர்பாகக் கருத்திட்டு வருபவர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்ட ஐஏசி (Indian Army Calling) eன்ற பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் தலைவருமான நிறுவனராகவும் பசவ ரமணா என்பவர் இருக்கிறார். இவர் நரலோகேஷ் உறவினர் என்று சொல்லப்படுகிறது. அப்படித்தான் எக்ஸ் தளத்தில் நரலோகேஷை டேக் செய்துள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பயிற்சிக் கூடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கே பயிலும் மாணவர்களைத்தான் ஒருவர் இந்த அடி அடிக்கிறார்.
ஆகவே ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். ராணுவம், கடற்படை, விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மாணவர்களிடம் 5 முதல் 10 லட்சம் வசூலிக்கிறார்கள். பயிற்சி முடிந்து மாணவர்கள் வேலை கேட்கும் போது அவர்களைச் சவுக்கால் அடிக்கின்றனர். இந்தக் கொடுமையைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை. அவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறிவருகின்றனர்.இந்த விவகாரம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பி இருக்கிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage