இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக மட்டும் அல்லாமல் உலகளவில் 4வது பெரிய வங்கியாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கி இன்று தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகள் வெளியான நிலையில் முதலீட்டு சந்தையில் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
ஜூன் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் லாபம் கடந்த வருடத்தை காட்டிலும் 30 சதவீத உயர்வுடன் 11,952 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இக்காலாண்டின் மொத்த வருவாய் 39 சதவீதம் அதிகரித்து 57,817 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைப்பிற்குப் பின்பு ஹெச்டிஎப்சி வங்கி வெளியிடும் முதல் காலாண்டு முடிவுகள் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது இதற்கு ஏற்றார் போல் சிறப்பான காலாண்டு முடிவுகளை ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்டு உள்ளது.
ஜூன் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த வட்டி வருமானம் 21 சதவீதம் அதிகரித்து 23,599 கோடி ரூபாயாக உள்ளது, மேலும் ஆப்ரேட்டிங் லாபம் வருடாந்திர அடிப்படையில் 22 சதவீதம் உயர்ந்து 18,772 கோடி ரூபாயாக உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் ஸ்திரதன்மைக்கு அளவுகோளாக இருக்கும் வாராக் கடன் அளவு 1.17 சதவீதமாக உள்ளது, மார்ச் காலாண்டில் இது 1.12 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 1.28 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த டெபாசிட் தொகை 19 சதவீதம் அதிகரித்து 19.13 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கரன்ட் அக்கவுண்ட் சேமிப்பு கணக்குகளில் வைப்பு நிதி 11 சதவீதம் அதிகரித்து 42.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இக்காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கி -யின் ரீடைல் லோன் 20 சதவீதமும், கமர்சியல் மற்றும் கிராமப்புற வங்கிக் கடன்கள் 29 சதவீதமும், கார்பரேட் மற்றும் ஹோல்சேல் கடன்கள் 11.2 சதவீதம் அதிகத்து மொத்த அட்வான்சஸ் அளவு 16 சதவீதம் அதிகரித்து 16.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் இன்று 1.59 சதவீதம் உயர்ந்து 1671.35 ரூபாயாக உள்ளது, இதன் மூலம் மொத்த சந்தை மதிப்பு 12.59 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.