கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காங்கிரஸ்- திமுக.. லோக்சபாவில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா சாடல்

post-img
டெல்லி: 1974-ம் ஆண்டு இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை எந்த ஒரு நடைமுறைகளையும் பின்பற்றாமல் இலங்கைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது; அதேபோல சியாச்சின் பிராந்தியத்தையும் பாகிஸ்தானுக்கு தாரைவார்த்துக் கொடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாராக இருந்தது என்று கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்தார். லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் தேஜஸ்வி சூர்யா பேசியதாவது: 1974-ம் ஆண்டு காங்கிரஸும் திமுகவும் இணைந்து இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். அப்போது எந்த ஒரு நடைமுறையும் அவர்கள் பின்பற்றவும் இல்லை. கச்சத்தீவு குறித்து ஜஹவர்லால் நேருவிடம் முன்னர் கேட்ட போது, இத்தகைய சிறு தீவுகளை இணைப்பது குறித்து முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்; இந்த சிறு தீவுகளின் மீதான உரிமையை விட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டோம் என்றார். அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்தியாவின் மிக முக்கியமான கச்சத்தீவை அன்றைய காங்கிரஸ் அரசு, இலங்கைக்கு தாரைவார்த்தது. அண்மையில் கூட முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சியாச்சினையே பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கவும் தயாராக இருந்தனர். இதுதான் இந்த நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளை இவர்கள் பாதுகாக்கும் லட்சணம். லோக்ச்பா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மனுஸ்மிருதி படிதான் இந்தியாவில் ஆட்சி நடைபெறுகிறது என விமர்சித்தார். அதேபோல வீர சாவர்க்கரையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு சிவசேனா எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் சாசனத்தை ராகுல் காந்தி தவறாக மேற்கோள்காட்டுவதாகவும் பாஜக எம்பிக்கள் விமர்சித்தனர். முன்னதாக திமுகவின் ஆ.ராசா எம்பி பேசுகையில், இந்தியாவை இரு நாடுகளாக கூறு போட்டது முகம்மது அலி ஜின்னா அல்ல; வீர சாவர்க்கர்தான் என விமர்சித்தார். இதற்கும் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Related Post