டாக்கா: நம் நாட்டுடன் வங்கதேசம் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் இப்போது உதவி செய்யும்படி கெஞ்ச தொடங்கி உள்ளது. அதாவது வங்கதேச நாட்டு மக்களுக்கு வினியோகம் செய்ய தேவையான அரிசிக்காக நம் நாட்டிடம் இருந்து 50,000 டன் அரிசியை வங்கதேசம் கேட்டுள்ளது. இந்த அரிசியை கொடுக்காவிட்டால் வங்கதேசம் பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும்.
வங்கதேச வன்முறையை தொடர்ந்து நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதோடு உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு அங்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது, கோவில்களை சேதப்படுத்தும் சம்பவங்களை வேடிக்கை பார்த்து வருகிறது. அதோடு நம்முடன் மோதி வரும் பாகிஸ்தானுடன் சேர்ந்து வங்கதேச அரசு செயல்பட உள்ளதாக அறிவித்தது.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக உருவாக நம் நாட்டு ராணுவம் தான் உதவி செய்தது. அதன் பிறகே 197 1ல் வங்கதேசம் தனிநாடாக உருவானது. இந்த போர் வெற்றியை குறிக்கும் ‛விஜய் திவாஸ்' நாளில் தியாகம் செய்த ராணுவனத்தினரை நினைவுக்கூர்ந்து டிசம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி போட்ட பதிவுக்கு அந்த நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா உதவியுடன் வங்கதேசம் தனி நாடாக உருவாகவில்லை. இந்த வெற்றியில் இந்தியா ஒரு கூட்டாளியாக இருந்தது. அதற்கு மேல் எதுவும் இல்லை என கூறினர்.
இதுதவிர வங்கதேசம் - இந்தியா எல்லையான கோழிக்கழுத்து பகுதியில் துருக்கி நாட்டு துரோன்களை வைத்து நம் நாட்டை உளவு பார்க்க தொடங்கி உள்ளது வங்கதேசம். அதற்கு பதிலடியாக இந்தியாவும், ட்ரோன்களை குவித்து வருகிறது. இப்படி எல்லையில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இதற்கிடையே தான் இப்போது வங்கதேசம், நம் நாட்டிடம் உதவி கேட்கும் நிலைக்கு வங்கதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.
அதாவது வங்கதேசத்தில் தற்போது நிதி நெருக்கடி உள்ளது. அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இதற்கிடையே தான் வங்கதேசம் நம் நாட்டிடம் இருந்து 50,000 டன் அரிசி வழங்கும்படி கூறியுள்ளது. வங்கதேசத்தை பொருத்தவரை அரசு சார்பில் உணவு தானியங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்துக்காக வங்கதேசம், நம் நாட்டிடம் அரிசி கேட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கதேசத்தின் நிதி ஆலோசகர் சலிஹுதீன் அஹமது தலைமையில் பொருளாதார விவகார ஆலோசக கமிட்டி சார்பில் நடந்த கூட்டத்தில் இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க ஒப்புதல்பெறப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் உள்ள பஹாடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஒரு டன் அரிசயை 456.67 அமெரிக்க டாலருக்கு வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது. வங்கதேசம் தனியார் நிறுவனத்திடம் அரிசி கேட்டு இருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு பெரும் அளவு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யும்போது அதற்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும். இது வங்கதேசத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மோதலுக்கு நடுவே வங்கதேசம் அரிசி கேட்டுள்ளதால் இந்தியா வழங்குகிறதா? இல்லையா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அரிசி வழங்காவிட்டால் அது வங்கதேசத்துக்கு பெரிய பிரச்சனையாக மாறும்.
ஏனென்றால் வங்கதேச உணவு துறை அமைச்சகம் டிசம்பர் 17 ம் தேதி வழங்கிய புள்ளிவிபரத்தின்படி அந்த நாட்டில் 1.1148 பில்லியன் டன் உணவு தானியங்கள் இருப்பு உள்ளது. இதில் 7 லட்சத்து 42 ஆயிரம் டன்னுக்கு அரிசி உள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 2.6625 டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது இதில் அரிசி மட்டும் 54,170 டன் அளவாகும். இதற்கிடையே தான் தற்போது அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தான் வங்கதேசம் நம் நாட்டிடம் அரிசி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்துள்ளது.