அண்ணே ’அவர்’ நமக்கு வேணாம்ணே! ஸ்கெட்ச் போடும் ஆதவ் அர்ஜுனா.. தளபதியிடம் புலம்பும் தவெக நிர்வாகிகள்?

post-img
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகிய அக்கட்சியின் முன்னாள் துணை பொது செயலாளரான ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் உலாவி வருகிறது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் வருகையை விரும்பாத சீனியர்கள் அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என விஜய்க்கு அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கட்சியின் பெயரை அறிவித்தது தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை, மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா என மிகவும் பிசியாகவே இருக்கிறார். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரைப் பற்றி தான் பேசி வருகின்றனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விஜய் குறித்து பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பாஜகவைக் கொள்கை எதிரியாகவும், திமுகவை நேரடி எதிரியாகவும் விஜய் குறிப்பிட்டார். மேலும் கூட்டணிக்கு தயார் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை கொண்டு விஜய் தனியாக கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இப்படியாக பல விவகாரங்கள் தமிழக அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமீபத்திய நிகழ்வுகள் அரசியலில் கவனிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா கட்சியில் சேர்ந்த 21 நாட்களில் துணை பொது செயலாளர் பதவியை பெற்றதோடு, கட்சியின் சில நிகழ்வுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். குறிப்பாக மாநாடுகளை ஒருங்கிணைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது என இருந்த ஆதவ் அர்ஜுனா திடீரென ஆட்சி அதிகாரத்தில் பங்குப் கூட்டணியில் இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது எனக் கூறியது அந்தக் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுகவினர் கொந்தளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. சிறிது நாட்களுக்கு முன்பு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் பலத்தை எதிர்ப்பை பெற்றது. இதை அடுத்து அவரை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார் திருமாவளவன். அதே நேரத்தில் தானே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா ஒரு அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேரப் போவதாகவும், கட்சியில் துணை பொது செயலாளர் பதவி அல்லது பொருளாளர் பதவியை அவர் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் சேர்க்க வேண்டாம் என திரைத்துறையினரும் ஏற்கனவே அரசியலில் இருக்கும் சில சீனியர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கட்சியில் ஆதவை சேர்க்க வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் விஜய்க்கு அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தபோது ஆதவ் அர்ஜுனா அந்த கட்சியில் பல நிர்வாகிகளை பகைத்துக் கொண்டார். மேலும் திமுகவுக்கும் அவர் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறார். இப்படியாக விஜய்யின் எதிரி என கருதப்படும் திமுகவுக்கு அவர் பணியாற்றி இருப்பதால் அவரது செயல்பாடுகளில் சந்தேகம் இருக்கிறது. எனவே அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என விஜய் இடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்களாம். மேலும் விஜய் கட்சியின் மாவட்ட தலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் ஆதவ் அர்ஜுனாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டாம் என இரண்டாம் கட்ட தலைமைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி எனினும் விஜய் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையை பெற்று அதற்கேற்றவாறு முடிவு எடுப்பார் என்கின்றனர். அதே நேரத்தில் ஆதவ் அர்ஜுனா தேர்தல் வியூகங்களில் அனுபவம் பெற்றவர் என்பதால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அவரை பயன்படுத்திக் கொள்ள விஜய் திட்டமிட்டு இருந்தார். அதன் காரணமாகத்தான் அவர் ஏற்பாடு செய்த புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். அதன் காரணமாகவே ஆதவ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஆனால் நிர்வாகிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட ஆலோசனை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.

Related Post