காந்திநகர்: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வரும் நிலையில் அதனை வடிவமைத்ததாக கூறிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சந்திரயான் 3 திட்டம் மூலம் நிலவின் மேற்பரப்பில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா 4வது நாடாக கால்பதித்துள்ளது. அதோடு நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியா பெற்றுள்ளது.
இந்த பெருமைகளுக்கு முக்கிய காரணம் என்பது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தான். இந்த விக்ரம் லேண்டர் தான் திட்டமிட்டப்படி கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கி சாதித்தது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரும் வெளியே வந்து நிலவில் ஆய்வு செய்கிறது.
இந்நிலையில் தான் நிலவின் ஆக்சிஜன் இருப்பதை ரோவர் கருவி கண்டுபிடித்துள்ளது. மேலும் சல்பர், அலுமினியம், குரோமியம், மாங்கனீஸ் உள்பட ஏராளமான தனிமங்கள் நிலவில் இருப்பதை ரோவர் கருவி கண்டுபிடித்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் கருவி இன்னும் 8 நாட்கள் நிலவில் ஆய்வு செய்ய உள்ளது. இதனால் நிலவை பற்றி இன்னும் அறியாத பல தகவல்கள் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் மூலம் தெரியவரும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் விக்ரம் லேண்டரை வடிவமைத்ததே நான் தான் என உரிமை கொண்டாடிய நபரை குஜராத் மாநிலம் சூரத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரது பெயர் மிதுல் திரிவேதி. இவர் சூரத் நகரை சேர்ந்தவர். கடந்த 23ம் தேதி மாலையில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதனை வடிவமைத்ததே நான் தான் என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த மிதுல் திரிவேதி, ‛‛நான் இஸ்ரோவில் பழங்கால அறியவில் அப்ளிகேஷன் துறையின் உதவி தலைவராக இருக்கிறேன். நான் தான் விக்ரம் லேண்டரை வடிவமைப்பு செய்தேன்'' என தெரிவித்தார். மேலும் அவரது நியமனம் தொடர்பான கடிதத்தையும் போலியாக காண்பித்தார். இவரது இந்த கருத்து என்பது வேகமாக பரவியது.
‛ஆக்சிஜன்’ இருக்கு! நிலவிலும் மனிதர்கள் வாழலாம் போலயே? யோசிக்க வைத்த சந்திரயான் 3! ‛மாஸ்’ அப்டேட்
இதையடுத்து சம்பவம் குறித்த போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மிதுல் திரிவேதியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கும், இஸ்ரோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அவருக்கும் ‛சந்திரயான் -3 திட்டத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்பதும் உறுதியானது. மேலும் பப்ளிசிட்டிக்காக அவர் இப்படி போலியான தகவலை தெரிவித்ததும் தெரியவந்தது.
அதோடு இஸ்ரோவின் அடுத்த விண்வெளி திட்டமான "மெர்குரி ஃபோர்ஸ் இன் ஸ்பேஸ்" திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி குழு உறுப்பினராக இருப்பதாக அவர் போலி கடிதத்தை காட்டியதும் தெரியவந்தது. இவரை கைது செய்துள்ள போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.