மீண்டும் களேபரம்.. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் - பாஜக கூட்டணி எம்பிக்கள் போராட்டம் - பரபரப்பு

post-img
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று 2வது நாளாக பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் போட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளுடன் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சியினர் முடக்கி வருகின்றனர். நேற்றைய தினம் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். நீலநிற ஆடைகள் அணிந்து வந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அப்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். ராகுல் காந்தி தான் அவர்களை தள்ளிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்று நாடாளுமன்றத்தின் எந்த நுழைவு வாயிலிலும் போராட்டம் நடத்தக்கூடாது என்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் சவுக் பகுதியில் இருந்து பதாகைகளுடன் பேரணியாக புறப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தை அடைந்தனர். இந்த பேரணிக்கு பிரியங்கா காந்தி தலைமை வகித்தார். அமித்ஷா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அதன்பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சி தான் தொடர்ந்து அம்பேத்கரை அவமதித்து வருகிறது. நேற்றைய போராட்டத்தில் ராகுல் காந்தியால் 2 எம்பிக்களின் மண்டை உடைந்துள்ளது. அதேபோல் நாகலாந்து பாஜக பெண் எம்பியை ராகுல் காந்தி அவமானப்படுத்தி உள்ளார். இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் இன்று போராட்டம் நடத்த சபாநாயகர் ஓம்பிர்லா தடை விதித்துள்ளதால் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Related Post