கடலூர்: கடலூரில் பக்கத்து வீட்டில் பாலை திருடி குடிக்க வந்த பூனையின் தலையில் சொம்பு சிக்கியதையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகர் பகுதியை சார்ந்தவர் ராஜசேகர். இவரது வீட்டில் இருந்த பாலை திருடி குடிக்க பூனை ஒன்று வந்தது . சொம்பு நிறைய பால் இருந்ததை கண்ட பூனைக்கு ஹைய்யா ஜாலி என்று இருந்தது. நாக்கை குழைத்துக் கொண்டு அந்த பூனை பாலை குடிக்க முயன்றது. அப்போது தலையில் பால் சொம்பு சிக்கிக் கொண்டது.
இதனையடுத்து மயங்கிய நிலையில் நகர முடியாமல் இருந்த பூனையை பார்த்து வீட்டின் உரிமையாளர் விலங்கு நல ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் அளித்தார். தகவலில் பேரில் அங்கு விரைந்து சென்ற செல்லா, பூனையின் தலையில் சிக்கிய சொம்பை எடுக்க முயன்றும் முடியாததால் பின்னர் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று மயக்க மருந்து அளித்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூனையின் தலையில் சிக்கிய சொம்பு அகற்றப்பட்டது.
தலையில் இருந்த சொம்பு அகற்றியதுதான் மிச்சம். பாலை கொஞ்சமாக குடித்த மகிழ்ச்சியில் பூனை சிட்டாட்டம் "பறந்து " சென்றுவிட்டது. அண்மைக்காலங்களாக குழந்தைகள் தலையில் குடம் சிக்குவது, குரங்கு தலையில் சொம்பு மாட்டுவது என இருக்கிறது. குழந்தைகளின் தலையில் சொம்பு, பாத்திரம் என எது மாட்டினாலும் தீயணைப்புத் துறையினர் வந்து அந்த பாத்திரத்தை வெல்டிங் மெஷினால் கட் செய்து மீட்கிறார்கள். அது போல்தான் பூனையின் தலையில் சிக்கிய சொம்பும் நீக்கப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage